நடிகை நயன்தாராவுக்கு நேற்று 36 வது பிறந்த நாள் இதனை யொட்டி அவர் நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

நயன்தாராவின் 65 வது படமான ’நெற்றிக்கண்’ திரில்லர் படமாகும். இந்த படத்தில் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். அவரது காதலர் விக்னேஷ் சிவன், இந்த படத்தை தயாரிக்கிறார்.

நயன்தாராவின் பிறந்த நாள் பரிசாக, தமிழக சினிமா உலகம், ‘நெற்றிக்கண்’ ட்ரெய்லரை வெளியிட்டது போல், மலையாள திரை உலகமும் அவருக்கு பிறந்த நாள் பரிசு அளித்துள்ளது.

நயன்தாரா, ‘நிழல்’ என்ற மலையாளப்படத்தில் நடித்து வருகிறார். குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை தேசிய விருது பெற்ற எடிட்டர் அப்பு பட்டாத்திரி இயக்குகிறார்.

அவர் டைரக்டராக அறிமுகமாகும் முதல் படம் இது. இந்த படத்தின் முதல் போஸ்டரும், நேற்று வெளியானது.

மம்முட்டியும், மோகன்லாலும் இதனை வெளியிட்டு, நயன்தாராவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

‘நெற்றிக்கண்’ போல் ‘நிழலும்’ திரில்லர் திரைப்படம் தான்.

– பா. பாரதி