இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் காலமானார்.

ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .

இன்று (செப்டம்பர் 26) எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

அவருடைய மறைவுக்கு நயன்தாரா விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் :-

தெய்வீகக்‌ குரல்‌ இனி இல்லை என்பதை நினைக்கும்‌போதே நெஞ்சம்‌ பதறுகிறது. தலைமுறைகளைத் தாண்டி நம்மை மகிழ்வித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்‌ சாருடைய குரல்‌, நம்முடைய எல்லா காலங்களுக்கும்‌, காரணங்களுக்கும்‌ பொருந்தி இருக்கும்‌ .

நீங்கள்‌ இனி இல்லை என்பதை மனம்‌ நம்ப மறுக்கிறது. ஆயினும்,‌ உங்கள்‌ குரல்‌ என்றென்றும்‌ நீங்காப் புகழுடன்‌ இருக்கும்‌. உங்களுக்கு அஞ்சலி செலுத்தி, எங்களுக்கு நாங்களே ஆறுதல்‌ சொல்லிக்‌கொள்ளும்‌ இந்த நேரத்தில்‌ கூட உங்கள்‌ பாடல்‌ மட்டுமே பொருந்துகிறது எங்கள்‌ வாழ்வில்‌.

உங்களின்‌ ஆளுமை அப்படி. நீண்ட காலமாக இடைவிடாமல்‌ உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம்‌ இல்லாமல்‌ பிரியா விடை கொடுக்கிறோம்‌. பாடும்‌ நிலா விண்ணிலிருந்து பாடட்டும்‌. உங்களைப் பிரிந்து வாடும்‌ உங்கள்‌ குடும்பத்தாருக்கும்‌, நண்பர்களுக்கும்‌, உங்கள்‌ திரை உலக சகாக்களுக்கும்‌, உலகெங்கும்‌ பரவி இருக்கும்‌ உங்கள்‌ எண்ணற்ற ரசிகர்களுக்கும்‌ என்‌ மனமார்ந்த ஆறுதல்‌ செய்தி இது” என தெரிவித்துள்ளார் .