ஸ்ரீநகர்

ம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தொகுதி எல்லைகளை நிர்ணயம் செய்யும் குழுவில் தேசிய மாநாடு மற்றும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இணைக்கப்பட உள்ளனர்.

கடந்த வருடம் காஷ்மீர் மாநிலத்தில் விதி எண் 370 ரத்து செய்யப்பட்டு மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.  இதில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் சட்டப்பேரவையுடனும் லடாக் யூனியன் பிரதேசம் நேரடி மத்திய அரசின் கண்காணிப்பிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை அமைக்கத் தொகுதிகள் பிரிக்கப்பட்டு அங்கு தேர்தல் நடந்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.   இதையொட்டி தொகுதி எல்லைகளை நிர்ணயம் செய்யக் குழு ஒன்றைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.  காஷ்மீர் மாநில தொகுதி நிர்ணய சட்டப்படி நான்கு சட்டப்பேரவை அல்லது நான்கு மக்களவை உறுப்பினர்கள் இந்த குழுவில் இணைக்கப்பட்டு  தேர்தல் ஆணையத்துக்கு உதவி செய்ய வேண்டும்.

பிரிவுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை அமைக்கப்படவில்லை.   தற்போது இந்த பகுதியில் 5 மக்களவை தொகுதிகள் உள்ளன.   இதில் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்ட ஐவர் உறுப்பினர்களாக உள்ளனர்.    அமைச்சரைத் தவிர பாஜகவின் ஜுகல் கிஷோர் சரமா உறுப்பினராக உள்ளார்.  அத்துடன் தேசிய மாநாட்டுக் கட்சியின் ஃபரூக் அப்துல்லா, முகமது அக்பர் லோன், ஹஸ்னைன் மசூதி ஆகியோர் உள்ளனர்.

இந்த ஐவரில் நால்வரை ஜம்மு காஷ்மீர் தொகுதி எல்லை நிர்ணய குழுவில் இணைக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் மக்களவை சபாநாயகரைக் கேட்டுக் கொண்டுள்ளது.  இந்தக் குழுவில் இரு பாஜக உறுப்பினர்களும்  இரு தேசிய மாநாட்டுக் கட்சி  உறுப்பினர்களும் இணைக்கப்பட உள்ளனர்.   இந்தக் குழு இப்பகுதியில் 90 சட்டப்பேரவை மற்றும் 5 மக்களவை தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயம் செய்ய உள்ளது.   அத்துடன் தலித்துகள் பழங்குடியினருக்கான தனித் தொகுதிகள் எவை என்பதையும் இந்தக் குழு முடிவு செய்ய உள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்ன என்றால் தற்போது இணைக்கப்படும் நால்வருக்கும் முடிவு எடுக்கவோ அல்லது குழு எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவாக அல்லது எதிராக வாக்களிக்கவோ உரிமை கிடையாது என்பதாகும்.