டில்லி

டிகை ரகுல் பிரித் சிங் போதை மருந்து வழக்கில் தன்னைப் பற்றிய செய்திகள்  வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

சுஷாந்த் சிங் தற்கொலையைத் தொடர்ந்து அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக சுஷாந்த் காதலி ரியா சக்ரவர்த்தி மீது புகார் எழுந்தது  இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்த போது நடிகர் நடிகைகளின் போதை பழக்கம் குறித்துப் பல தகவல்கள் வெளியாகின.   இதையொட்டி நடிகை தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது.

இதையொட்டி ரகுல் பிரீத் சிங் தேசிய போதை மருந்து தடுப்புத் துறையின் விசாரணையில் ஆஜரானார்.  அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.   இது குறித்து ரகுல் பிரீத் சிங் கண்டனம தெரிவித்துள்ளார்.  மேலும் தம்முடைய புகழைக் கெடுக்கும் வகையில் செய்திகளை வெளியிடுவதாகவும் அவர் ஊடகங்கள் மீது புகார் எழுப்பினார்.

இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் டில்லி உயர்நீதிமன்றத்துக்கு ஒரு மனு அளித்துள்ளார். அதில் அவர், “கடந்த செப்டம்பர் மாதம் 24 அன்று தான் எனக்கு வாட்ஸ் அப் மூலம் சம்மன் கிடைத்து.   உடனடியாக அடுத்த நாள் நான் என் சி பி முன்பு ஆஜராகி எழுத்து மூலமாக விளக்கம் அளித்துள்ளேன். ஆனால் என்னைப் பற்றிப் பல தவறான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

ஏற்கனவே என் சி பி க்கு நான் அளித்த வாக்குமூலம் நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.  அது வெளி வராத நிலையில் எனது புகழைக் கெடுப்பது போல் ஊடகங்கள் பல தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறது.  எனவே இந்த வாக்குமூலம் அதிகாரப் பூர்வமாக வெளியாகும் வரை இந்த வழக்கில் என்னைக் குறித்த எந்த ஒரு செய்தியையும் ஊடகங்கள் வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் “ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.