15 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிப் பாடங்களைத் திருத்த உள்ள தேசிய கல்விக் குழு

டில்லி

தேசிய கல்வி மற்றும் ஆய்வு பயிற்சிக் குழு வரும் 2021 ஆம் ஆண்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிப் பாடங்களைத் திருத்தி அமைக்க உள்ளது.

நாட்டின் பள்ளிக் கல்விக்கான பாடங்களைத் தேசிய கல்வி மற்றும் ஆய்வு பயிற்சிக் குழு அமைக்கிறது   இந்தக் குழு சர்வதேச கல்வித் தரத்துக்கு ஏற்ப பாடங்களை திருத்தி வருகிறது.   இவ்வாறு 1975, 1988, 2000 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில்  பாடங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.  கடந்த 15 வருடங்களாக பாடங்கள் திருத்தி அமைக்கப்படவில்லை.

இந்நிலையில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இதுவரை நான்கு முறை பள்ளிப் பாடங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.   கடந்த 15 வருடங்களாகப் பாடங்களில் எவ்வித திருத்தமும் செய்யப்படவில்லை.  தற்போது தேசிய கல்வி மற்றும் ஆய்வுப் பயிற்சிக் குழுவுக்குப் பாடங்களில்  திருத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான இடைக்கால அறிக்கையைக் குழு வரும் டிசம்பர் மாதம் அளிக்கும்.  முழு அறிக்கை 2021 ஆம் வருடம் மார்ச் மாதம் அளிக்கப்படும்.   இம்முறை பாடப் புத்தகங்களில் உள்ள எதையும் குறைக்காமல் புத்தகங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் எனக் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் படைப்புத் திறன் வளர்ச்சி, வாழ்க்கை முறை, இந்தியக் கலை, கலாச்சாரம் மற்றும் ஒற்றுமை குறித்த பாடங்களும் சேர்க்கப்பட உள்ளன.  தேசிய கல்வி மற்றும் ஆய்வுப் பயிற்சிக் குழு ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கல்விக்கான தனித் தனி தொலைக்காட்சி சேனலகளை இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. ” என அறிவிக்கப்பட்டுள்ளது.