குஜராத்தில் 26 மக்களவை தொகுதிகளிலும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் போட்டி

அகமதாபாத்:

குஜராத்தில் 26 மக்களவை தொகுதிகளிலும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.


இது குறித்து தேசிவாத காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில தலைவர் ஜெயந்த் பட்டேல் செய்தியாளர்களிடம் கூறும்போது, காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை. குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகள் மற்றும் 5 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றார்.

இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவதால்,பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீண்ட காலமாக காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் இயற்கையான கூட்டணியாக இருந்தாலும், குஜராத்தில் மட்டும் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் நீடிக்கிறது.

கடந்த 2004 மற்றும் 2014-ல் இரு கட்சிகளும் குஜராத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. எனினும் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.

கடந்த 2017-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கடைசி நேரத்தில் இரு கட்சிகளுக்கிடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்தது. இம்முறை கடைசி நேரத்தில்கூட உடன்பாடு ஏற்படலாம் என்ற நம்பிக்கை இரு தரப்பிலும் ஏற்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published.