வேலைவாய்ப்பு விவகாரத்தில் மக்களிடம் பிரதமர் மோடி பொய் கூறுகிறார்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

நவாடா: வேலைவாய்ப்பு விவகாரத்தில் மக்களிடம் பிரதமர் மோடி பொய் கூறுகிறார் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

பீகார் சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் ராஷ்டிர ஜனதா தளக் கூட்டணிக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளார்.

பீகாரில் நவாடா மாவட்டத்தில் உள்ள ஹிசுவா பகுதியில் பிரசார பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி மற்றும் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது ராகுல்காந்தி பேசியதாவது:

பீகார் மக்களிடம் பிரதமர் மோடி பொய்யான பிரசாரம் செய்கிறார். மக்களிடம் பொய் கூற வேண்டாம். கடந்த தேர்தலின் போது 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மோடி கூறினார். ஆனால்  மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கினாரா?

விவசாயக் குழு மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை என்று விவசாயிகளை  மோடி அரசு துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.வேளாண் சட்டங்கள் மூலம் லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை உள்ளது. மோடி எங்கு சென்றாலும் பொய் மட்டுமே உரைக்கிறார் என்று கூறினார்.