பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

டில்லி:

மத்திய பாஜக அரசு மீது தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதன் மீது இன்று காலை முதல் விவாதம் நடந்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாஜக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி பேசினார். பேசிய பின்னர் அவர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்னது, கண் சிமிட்டியது போன்றவை உலகளவில் வைரலானது.

தொடர்ந்து எதிர்கட்சி உறுப்பினர்கள விவாதத்தின் மீது பேசினர். இறுதியில் பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அவர் எதிர்கட்கிகளையும், ராகுல்காந்தியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். மோடி பேசிக் கொண்டிருந்த போது எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். எனினும் அவர் தொடர்ந்து பேசினார்.

இதைதொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது.325 உறுப்பினர்கள் தீர்மானத்தை எதிர்த்தும், 126 பேர் ஆதரித்தும் வாக்களித்தனர்

வாக்கெடுப்பில் சிவசேனா கலந்துகொள்ளவில்லை. ஏற்கனவே அதிமுக இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.