‘’இரண்டு சிங்கங்களை இழந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி’’ -சிவசேனா பாய்ச்சல்.

‘’இரண்டு சிங்கங்களை இழந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி’’ -சிவசேனா பாய்ச்சல்.

பா.ஜ.க, தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஏற்கனவே சிவசேனா விலகி விட்ட நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலிதளம் கட்சியும், வெளியேறி விட்டது.

இதனை விமர்சித்து சிவசேனா கட்சி பத்திரிகையான ‘சாம்னா’’ வில், காரசாரமாகத் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.

’’தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா முன்னரே விலகி விட்டது.இப்போது அகாலிதளமும் வெளியேறி விட்டது. எனவே தேசிய ஜனநாயக கூட்டணி இப்போது உண்மையாகவே இருக்கிறதா? இருக்கிறது என்றால், அந்த கூட்டணியில் இப்போது எஞ்சியுள்ள கட்சி எது?’ என சாம்னா கேள்வி எழுப்பியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அகாலிதளம் விலகுவதைத் தடுத்து நிறுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை ’’ என குற்றம் சாட்டியுள்ள சாம்னா,’’ அந்த கூட்டணியில் இருந்த கடைசி தூணும், தன்னை துண்டித்துக்கொண்டது’’ என்று குறிப்பிட்டுள்ளது.

பா.ஜ.க, கூட்டணியில் இருந்து சிவசேனாவும், அகாலிதளமும் விலகியதை குறிப்பிடும் வகையில் ‘’ தேசிய ஜனநாயக கூட்டணி, இரண்டு சிங்கங்களை இழந்து விட்டது’’ என சிவசேனாவின் நாளிதழான சாம்னா மேலும் தெரிவித்துள்ளது. -பா.பாரதி.