பாட்னா :

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. , ஐக்கிய ஜனதா தளம், உள்ளிட்ட கட்சிகளை கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது.

ஆர்.ஜே.டி., காங்கிரஸ், மற்றும் இடதுசாரி கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி. கட்சி 75 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

அதற்கு அடுத்த படியாக, பா.ஜ,க. 75 இடங்களிலும், முதல்-அமைச்சர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் வென்றுள்ள போதிலும் ஓட்டு எண்ணிக்கை சதவீதம் மிக மிக குறைவாகவே உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு கோடியே 57 லட்சத்து ஆயிரத்து 266 ஓட்டுகள் வாங்கியுள்ளது. அதே சமயத்தில் மெகா கூட்டணி ஒரு கோடியே 56 லட்சத்து 88 ஆயிரத்து 458 ஓட்டுகளை பெற்றுள்ளது. அதாவது வெறும் 12 ஆயிரத்து 768 ஓட்டுகள் வித்தியாசத்தில் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது.

வெற்றி வித்தியாசம் வெறும் 0.03 சதவீதம் தான். இதனிடையே “பீகாரில் 20 தொகுதிகளில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதால், அந்த ஓட்டுகளை மீண்டும் எண்ண வேண்டும்” என ஆர்.ஜே.டி. கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

– பா. பாரதி