தெரு நாய்களை மோப்ப நாய்களாக்கப் பயிற்சி அளிக்கும் தேசிய பேரிடர் மீட்பு படை

காசியாபாத்

தெரு நாய்களை மோப்ப நாய்களாக மாற்றும் பயிற்சியைத் தேசிய பேரிடர் மீட்பு படை செய்து வருகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் நாய்ப்படைகள் மூலம் பல நேரங்களில் பேரிடரில் சிக்கியோரை மீட்கும் பணிகள் செய்து வருகின்றனர்.  உலக அளவில் கடந்த 2011 ஆம் வருடம் ஜப்பானில் நடந்த சுனாமி மற்றும் 2015 ஆம் வருட நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகிய சமயத்தில் நாய்ப்படைகளின் பணி குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நாய்கள் லாப்ரடார் இனத்தைச் சேர்ந்தவை ஆகும்.   ஆனால் காசியாபாத் நகரில் தேசிய பேரிடர் மேலாண்மை படை தெரு நாய்களைக் கொண்டு நான்கு நாய்களை கொண்ட நாய்ப்படையை அமைத்துள்ளது.  இந்த நாய்கள் காசியாபாத் நகரில் உள்ள கோவிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த தெரு நாய்கள் ஆகும்.

இவற்றில் பிளேஸ் மற்றும் டைகர் ஆகிய நாய்கள் 17 மாதம் ஆனவை.  மற்ற இரண்டும் 50 நாட்கள் ஆன சிறு குட்டிகள் ஆகும்.   இது குறித்து தேசிய மேலாண்மை படைத் தளபதியான பி கே திவாரி, “இதுவரை இந்த படைகளில் லாப்ரடார் மற்றும் ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய்களை மட்டுமே பயன்படுத்தி வந்தோம்.  தற்போது இந்த நாய்களுக்குச் சோதனை முறையில் பயிற்சிகள் அளித்துள்ளோம்.

இந்த தெரு நாய்களும் பயிற்சியைத் திறம்படப் பெற்று மற்ற வகை நாய்களுக்குச் சமமாக உள்ளன.   ஏற்கனவே உள்ள 20 நாய்களுடன் விரைவில் பிளேஸ் மற்றும் டைகர் ஆகிய நாய்களும் இணைக்கப்பட உள்ளன.  மற்ற இன நாய்களைப் போல் இவற்றுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படுவது இல்லை.    அத்துடன் மற்ற இன நாய்களுடன் இவை நல்ல நட்புடன் பழகி வருகின்றன. ” எனத் தெரிவித்துள்ளார்.