ஓகி புயலால் மாயமான 180 மீனவர்கள் மீட்பு! கடற்படை தகவல்

டில்லி,

ஓகி புயல் காரணமாக காணாமல் போன மீனவர்களில் 180 மீனவர்கள் லட்சத்தீவு அருகே மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான ஓகி புயல் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சின்னப்பின்னப் படுத்தியது. அந்த நேரத்தில் கடலுக்கு சென்ற கன்னியாகுமரி மற்றும் கேரள பகுதி மீனவர்கள் இதுவரை மீட்கப்படவில்லை என்று கூறப்பட்டு வருகிறது.

மாயமான மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர கோரி வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில்நிலையத்தில் நேற்று, 8 மீனவ கிராம மக்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

நேற்று காலை முதல் நடந்த இந்த மறியல் போராட்டம் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நள்ளிரவு  வாபஸ் ஆனது.

இந்நிலையில், ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களில் 180 பேர் லட்சத்தீவு அருகே இருப்பதாக இந்திய கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

.17 படகுகளுடன் சென்ற 180 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த போது, அவர்களை இந்திய கடற்படை மீட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை,  இந்தியா அழைத்து வர இந்திய கடற்படை முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது