திப்ரூகர்: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அசாமில் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற பேரணி பெரும் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

குடியுரிமை சட்டத்தை நீக்க கோரி அசாமில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாணவர் அமைப்பினர் பேரணி, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் அசாமில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஒரே நாளில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர். மாணவர்களின் இந்த போராட்டம் ஒரு எழுச்சியாக பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் சர்பானந்தா சோனோவாலின் சொந்த மாவட்டமான திப்ரூகரில் இந்த எழுச்சி போராட்டம் நடைபெற்றிருக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இந்த எழுச்சி ஏற்பட்டு இருக்கிறது.

அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து இந்த சட்டத்தை எதிர்க்கிறோம். அசாம் மாநிலத்தில் நடைபெற்ற இந்த பேரணி தான் இதுவரை நடைபெற்ற பேரணிகளிலே மிக பெரியது என்று மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் இந்த எழுச்சி போராட்டம் போன்று, மாநிலத்தின் மற்ற பகுதிகளான தேஸ்பூர், டெர்கான், கோலாகட் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டங்களிலும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.