நாகை: காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை என கூறப்படுகிறது.

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி இருக்கிறது. சென்னையிலிருந்து 590 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் இந்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக மாறி வரும் புதன்கிழமை பிற்பகலில்  மாமல்லபுரம்-காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் பல முன் எச்சரிக்கை நடடிவக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந் நிலையில், காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை என கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட படகுகளில் அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீனவர்களின் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.