கோவையில் இருந்து 14 சிறப்பு ரயில்களில் வடமாநில தொழிலாளர்கள்: 18000 பேர் அனுப்பி வைப்பு

கோவை: கோவையில் தவித்த 18,516 வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவை மாவட்டத்தில் வேலை பார்க்கும் லட்சக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலையின்றி தவித்தனர். வேலை, பொருளாதார இழப்பு காரணமாக தங்களை சொந்த ஊர்களுக்கே அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று கடந்த 8ம் தேதி முதல் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கோவையில் இருந்து பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு இதுவரை 13 சிறப்பு ரயில்கள் புறப்பட்டு சென்றது.

இந்த சிறப்பு ரயில்களில் நேற்று வரை 17,052 வடமாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந் நிலையில் இன்று காலை 10 மணிக்கு கோவையில் இருந்து ஒடிசா மாநிலத்துக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது.

அதில் 1,464 தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை கோவையில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் பீகார், ஒடிசா, உத்திரபிரதேசம், ஜார்க்கண்ட், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றது. இதில் மொத்தம் 18,516 வட மாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.