டில்லி:

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போராடி வந்த அந்த பகுதி மக்களின் கிடைத்த வெற்றி என்று கூறப்படுகிறது.

கடந்த வருடம் மார்ச் மாதம், மத்திய அரசு-ஜெம் நிறுவனம் நடுவே உருவான ஒப்பந்தம் அடிப்படையில் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை துவக்க ஆயத்த பணிகள் நடந்தன. ஆனால், சுற்றுச்சூழல் பொதுமக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து பெரும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் தமிழக அரசு இத்திட்டத்திற்கு அனுமதி தரவில்லை.

த்திய அரசு தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் திட்டமிட்டே மீத்தேன், ஷெல் கேஸ், ஹைட்ரோ கார்பன் திட்டம், ஓஎன்ஜிசி எண்ணை கிணறு போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நெற்களஞ்சியமான தஞ்சை பகுதி நாசமாக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 110 இடங்களில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதியில் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வாணக்கன் காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயுவை தங்கள் பகுதியில் எடுக்கக் கூடாது என மக்கள் போராடி வந்தனர்.

இந்த திட்டங்கள் செயல்படுத்துவதாலும், அதிருந்து வெளியேற்றப்படும் எண்ணைக் கழிவுகளா லும் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி, அந்த பகுதி மக்கள், மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

நெடுவாசலில் நடைபெற்ற மக்கள் போராட்டம்

ஏற்கனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதற்கட்டமாக போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் போராட்டம் நடத்திய பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் புதுக்கோட்டை உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதியில் எரிவாயு எடுக்க மீண்டும் அனுமதி அளித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதனை அறிந்த நெடுவாசல் மக்கள் மீண்டும் 2-ம் கட்டமாக போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஏப்ரல் 12-ந் தேதி முதல் போராட்டம் தொடங்கியது. பல்வேறு வகையான நூதன போராட்டங்களை நடத்தி  வந்தனர்.  அவர்களின் போராட்டம் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து.

இந்த  போராட்டத்தின்போது அந்த பகுதி மக்களுக்கு ஆதரவாக  இயக்குனர் கவுதமன், விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டி யன், நடிகர் மயில்சாமி உள்பட அனைத்து  அரசியல் கட்சியினரும்  ஆதரவு தெரிவித்து வந்தனர்.

நெடுவாசல் போராட்டத்தின்போது, அந்த பகுதியை சேர்ந்த பொன்னம்மாள் என்ற மூதாட்டி உயிரிழந்தார். அதுபோல சட்டக்கல்லூரி மாணவி வளர்மதி நெடுவாசல் போராட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராடியதால், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில், நெடுவாசல் புராஜக்டை கைவிடுவதாக ஜெம் நிறுவனம்  மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், நெடுவாசலுக்கு பதிலாக வேறு இடத்தை ஒதுக்குமாறு கோரி உள்ளது.

நெடுவாசல் மக்களின்  அயராத போராட்டம் காரணமாக தற்போது அந்த பகுதி மக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் விடுதலை கிடைத்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.