சென்னை,

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அதிரடிப்படை காவல்துறையினரும் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

இதன் காரணமாக மெரினா கடற்கரை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற தன்னெழுச்சி போராட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் இணைந்து உலகையே வியக்க வைக்கும் வகையில் அமைதியான போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தற்போது தமிழக மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாது, மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டுள்ளது.

இது தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் மீண்டும் ஒரு போராட்டம் நடத்த முன்வரு மாறு அழைப்பு விடுத்து சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.

இதையடுத்து நேற்று மாலை முதலே மெரினா கடற்கரையில் போலீசார் கடும் கெடுபிடிகளில் இறங்கி உள்ளனர்.

அங்கு வியாபாரம் செய்துவரும் வியாபாரிகளை மிரட்டி  கடைகளை அடைக்குமாறு வலியுறுத்தி னர். குடும்பத்தோடு வரும் பொதுமக்களையும் விசாரித்து கெடுபிடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை முதலே மெரினா கடற்கரை முழுவதும் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. அத்துமீறி யாரும் கடற்கரை பகுதியில் நுழைந்துவிடாதபடி பலத்த பாதுகாப்பு ஏற்படுகளை செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை கடற்கரை பகுதிக்கு வந்த  ஒருசில இளைஞர்களை கைது செய்து விசாரித்து  வருகின்றனர்.

மீண்டும் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்க ளில் தேவையற்ற வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, மதுரை, திருச்சியிலும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பரவிய தகவலையடுத்து அந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.