தொடரும் நெடுவாசல் போராட்டம்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இந்த மக்கள்  இரண்டாம் கட்ட போராட்டத்தை கடந்த 12ம் தேதி துவக்கினர். நேற்று நடந்த போராட்டத்தில் தொட்டில் கட்டி அதில் பிரதமர் மோடியின் முகமூடி அணிந்த சிறுவனை அமரச்செய்து நம்மாழ்வார் என்று பெயரிடப்பட்ட ஒருவர், இத்திட்டத்திற்கு எதிராக மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

29வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில்  நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், “‘ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நாங்கள் போராடிய போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் எங்கள் பகுதிக்கு இத்திட்டம் வராது என்று உறுதியளித்ததனர். அதனாலேயே அப்போது நாங்கள்  22 நாள் போராட்டத்தை கைவிட்டோம். இந்நிலையில் தற்போது ஜெம் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்கெல்லாம் காரணம் பிரதமர் நரேந்திரமோடி தான். அதனால் தான் நாங்கள் மோடியை தொட்டில் குழந்தையாக சித்தரித்து நம்மாழ்வர் இத்திட்டத்தை ரத்து செய்ய மனு கொடுப்பது போன்ற நூதன போராட்டத்தில் ஈடுபட்டோம். மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை நிறைவேற்ற முயன்றால், தொடர்ந்து பெரும் போராட்டங்களை நடத்துவோம்” என்று தெரிவித்தனர்.