நீட் ஆதரவு: பா.ஜ.க. – கிருஷ்ணசாமி வழியில் விஜயகாந்த்!

விஜயகாந்துடன் மணி

மாணவி அனிதாவின் தற்கொலையை அடுத்து தமிழகத்தில் நீட் எதிர்ப்பு போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.  பெரும்பாலான கட்சிகள் நீட் தேர்வை எதிர்த்து அறிக்கைகள் விடுத்துள்ளதோடு போராட்டங்களும் அறிவித்துள்ளன. வேறு பல அமைப்புகளும், அமைப்பு சாரா மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் தன்னெழுச்சியாக நீட் தேர்வுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில், பாஜக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் மட்டும் நீட் தேர்வை ஆதரித்து வருகின்றன. அதோடு, மாணவி அனிதாவின் தற்கொலைக்கு சிலரது தூண்டுதலே காரணம் என்று கூறி இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி வருகின்றன. இவர்களது கருத்துக்கு பெரும்பாலான பொதுமக்கள், சமூகவலைதளங்களில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பாஜக – புதிய தமிழகம் போலவே தே.மு..தி..க.வும் நீட் ஆதரவு நிலைபாடு எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதற்கு ஆதாரமாக கூறப்படுவது அனிதா தற்கொலை குறித்து தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந்த் விடுத்த அறிக்கை.

அதில், “மாணவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களது பதவியும், அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதில் தமிழக ஆட்சியாளர்கள் செயல்பட்டதன் விளைவு, இன்று ஒருஉயிர் பறிபோயுள்ளது. நீட் தேர்வை பற்றி மாணவர்களுக்கு தெளிவாக அறிவுறித்தி இருந்தால், இதுபோன்று தற்கொலை ஏற்பட்டிருக்காது” என்று தெரிவித்திருந்தார்.

அதாவது “நீட் தேவையில்லை” என்று அவர் தெரிவிக்கவில்லை. நீட் குறித்து விழிப்புணர்வை தமிழக மாணவர்களிடம் ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜி.எஸ். மணி என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அவர், “தமிழகத்தில் நடைபெறும் நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.  மாணவர்களை சில கட்சிகள் தூண்டிவிட்டன.  அதனாலேயே அனிதா தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது முழுதும் பாஜக மற்றும் புதிய தமிழகம் முன்வைக்கும் வாதமாகும்.

இவர் , தே.மு.தி.க.வின் டில்லி மாநில செயலாளர் ஆவார்.

இதையடுத்து, “விஜயகாந்தின் மனநிலையை அறிந்தே அவரது கட்சியைச் சேர்ந்த ஜி.எஸ். மணி, நீட் தேர்வை எதிர்த்து நடக்கும் போராட்டங்களு்ககு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். விஜயகாந்தின் அறிக்கையும் நீட் தேர்வுக்கு ஆதரவாக இருக்கிறது. ஆகவே பாஜக மற்றும் புதிய தமிழகம் பாதையில் விஜயகாந்த், நீட் தேர்வை ஆதரிக்கிறார்” என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published.