சென்னை:

சென்னை பெருநகர எல்லையை விரிவுபடுத்துவதை தமிழக ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும் என்றும், ரியல் எஸ்டேட் லாபத்துக்காக சென்னை விரிவாக்கக்கூடாது என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெருநகர எல்லையை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பெரும்பான்மை பகுதிக்கு நீட்டித்து, 8 மடங்காக விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிடுள்ளது. இப்போதுள்ள சென்னை பெருநகர எல்லைப் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை செய்து தர முடியாமல் பெருநகர வளர்ச்சிக் குழுமமும், உள்ளாட்சி அமைப்புகளும் திணறி வரும் சூழலில் இது போகாத ஊருக்கு வழிகாட்டுவதாகவே அமையும்.

சென்னை பெருநகரத்தின் எல்லை இப்போதைய நிலையில் 1189 சதுர கி.மீ அளவுக்கு பரந்து விரிந்து கிடக்கிறது. இதை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லை வரை நீடித்து 8.878 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக மாற்றுவது தான் ஆட்சியாளர்கள் திட்டமாகும். இத்திட்டத்தின்படி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 1,709 கிராமங்கள் சென்னை பெரு நகர எல்லைக்குள் கொண்டு வரப்படும்.

இதனால் சென்னை பெருநகரம் என்பது டில்லி – தேசியத் தலைநகரப் பகுதிக்கு அடுத்த படியாக இந்தியாவின் இரண்டாவது பெருநகரமாக உருவெடுக்கும். மேலோட்டமாகப் பார்க்கும் போது சென்னை பெருநகரப் பகுதி விரிவுபடுத்தப்பட்டால், பெருநகர எல்லைக்குள் புதிதாக சேர்க்கப்படும் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்; அது மக்களுக்கு நன்மையாக அமையும் என்ற பொதுவான எண்ணம் எழலாம்.

ஆனால், நடைமுறையில் நகரமயமாக்கலின் எந்த நன்மையும், புதிதாக சேர்க்கப்படும் பகுதிகளுக்கு கிடைக்காது என்பது ஒரு புறமிருக்க, அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், பல்லுயிர் வாழிடங்கள் உள்ளிட்ட இயற்கையின் கொடைகள் அழிக்கப்பட்டு விடும் என்பது தான் உண்மை.

இந்தியாவின் நான்கு பெரிய நகரங்களில் ஒன்றான சென்னையின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்றவாறு சென்னையின் பரப்பளவையும், கட்டமைப்பையும் அதிகரிக்க வேண்டாமா? என்ற ஐயம் ஏற்படலாம். ஆனால், அதற்கு எந்தத் தேவையும் இல்லை.

மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுடன் ஒப்பிடும் போது சென்னை மாநகரின் மக்கள் தொகை கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.

சென்னை பெருநகரப் பகுதியின் இப்போதைய மக்கள்தொகை 77 லட்சமாகும். இது அடுத்த சில பத்தாண்டுகளில் 25 சதவீதம் அதிகரிப்பதாக வைத்துக் கொண்டாலும் அவர்கள் அனைத்து வசதிகளுடன் வாழ்வதற்கு இப்போதுள்ள 1189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு போது மானதாகும். இதை இன்னும் விரிவுபடுத்தி தேவையில்லாத சிக்கல்களை அரசு விலை கொடுத்து வாங்கி விடக்கூடாது.

சென்னை பெருநகரப் பகுதி விரிவுபடுத்தப்பட உள்ள பகுதிகளில் பசுமையான வயல்வெளிகள் உள்ளன. அவற்றைப் பாதுகாக்கவும், 4200 நீர் நிலைகளை பராமரிக்கவும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை.

இத்தகைய சூழலில் சென்னைப் பெருநகரப் பகுதி விரிவாக்கப்பட்டால் வயல்வெளிகளும், நீர்நிலைகளும் வீட்டுமனைகளாக்கப்படலாம். அத்தகைய தாழ்வான பகுதிகள் குடியிருப்புகளாக்கப்பட்டால், 2015-ம் ஆண்டில் ஏற்பட்டது போன்ற வெள்ளம் உருவானால் அதன் பாதிப்புகளை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது.

அதுமட்டுமின்றி விளை நிலங்கள் மனைகளாக்கப்பட்டால் உணவு உற்பத்திக் குறைந்து உணவுப் பஞ்சம் ஏற்படக்கூடும். காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சென்னை பெருநகர எல்லை விரிவாக்கப்படு வதால் அங்குள்ள மக்களின் உரிமைகளும், வாழ்வாதாரங்களும் பறிக்கப்படலாம். இந்த அநீதிக்கு எதிராக விரிவாக்கப்படவுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு தீவிரமாக போராட வேண்டும்.

சென்னை பெருநகரப் பகுதி விரிவாக்கப்படுவதால் இத்தனை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், அவற்றைப் பொருட்படுத்தாமல், பெருநகர விரிவாக்கத்தில் ஆட்சியாளர்கள் தீவிரம் காட்டுவதன் பின்னணியில் வேறு சில காரணங்களும் உள்ளன.

தமிழக ஆட்சியாளர்கள் கையூட்டு மூலம் சேர்த்த பணத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை ஒட்டு மொத்தமாக வாங்கிக் குவித்துள்ளனர். சென்னைப் பெருநகரப் பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டால் அவர்கள் வாங்கிக் குவித்துள்ள நிலங்களின் மதிப்பு உயரும்.

அது மட்டுமின்றி, ஏற்கனவே அப்பகுதியில் நில வணிகம் செய்வோருக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதால் அவர்களிடமிருந்து பெருந் தொகை கையூட்டாக பெறப்பட்டுள்ளது. அதற்கு பதிலுதவியாகத் தான் சென்னைப் பெருநகர எல்லையை விரிவுபடுத்த பெருநகர வளர்ச்சிக் குழுமம் துடிக்கிறது. ஆட்சியாளர்களின் சுயநலனுக்காகவும், சுயலாபத்துக்காகவும் சென்னை பெருநகரத்தின் எல்லைகள் மாற்றி சீரழிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எனவே, சென்னை பெருநகர எல்லைகளை விரிவுபடுத்தும் திட்டத்தை தமிழக ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். இப்போதுள்ள பெருநகர எல்லைக்குள் அனைத்து உட் கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கி அங்குள்ள மக்களுக்கு நகரமயமாக்கலின் நன்மைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.