புதுடெல்லி: தாங்கள் கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தானது, 2வது டோஸ் எடுத்துக்கொண்டதிலிருந்து 14 நாட்கள் கழித்தே அதன் திறன் தீர்மானிக்கப்பட முடியும் என்று தெரிவித்துள்ளது கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை தயாரித்துள்ள ஐதராபாத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனமான பாரத் பயோடெக்.

கொரோனா தடுப்பு மருந்து சோதனைக்கு, தன்னார்வ முறையில் தன்னை உட்படுத்திக்கொண்ட ஹரியானா மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ் -க்கு கொரோனா பாசிடிவ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, இந்த விளக்கத்தை அளித்துள்ளது அந்நிறுவனம்.

“கோவாக்சின் கிளினிக்கல் பரிசோதனைகள் என்பது, 2 டோஸ்கள் அடிப்படையிலானது. அவை ஒவ்வொன்றுக்கும் இடையில் 28 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். எனவே, 2வது டோஸ் எடுத்துக்கொண்டு 14 நாட்கள் கழித்தே, அதன் திறனை தீர்மானிக்க முடியும்.

“மூன்றாம் கட்ட பரிசோதனைகள், டபுள் பிளைன்டட் தன்மையிலானது மற்றும் சீரற்றது, ஏனெனில், அதில் 50% பேர் தடுப்பு மருந்தைப் பெறுவார்கள் மற்றும் 50% பேர் பிளாஸ்போவைப் பெறுவார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.