செப்டம்பர் 12ம் தேதி மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீக்கம்: நீட் தேர்வுக்காக மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: நீட் தேர்வுக்காக செப்டம்பர் 12 அன்று மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொரோனோ எதிரொலியாக தள்ளிவைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் 13ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வையும், ஜேஇஇ தேர்வுகளையும் நடத்த கூடாது என்று எதிர்க்கட்சிகள், பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன.

உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடுத்தன. 11 மாணவர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தேர்வை ரத்து செய்து உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதியும் அளித்தது.

இந் நிலையில் நீட் தேர்வு மாணவர்களுக்காக செப்டம்பர் 12 அன்று மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறி உள்ளதாவது:

மேற்குவங்க அரசு ஆரம்பத்தில் செப்டம்பர் 11, 12  தேதிகளில் மாநிலம் தழுவிய ஊரடங்கை அறிவித்தது. 13ம் தேதி திட்டமிடப்பட்ட நீட் தேர்வை கருத்தில் கொண்டு, 12ம் தேதி ஊரடங்கு விதிகளை நீக்குமாறு மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் வர பெற்றன.

அதனை மனதில் கொண்டு, செப்டம்பர் 12ம் தேதி ஊரடங்கை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ஆகையால் மாணவர்கள் 13ம் தேதி தேர்வில்  அச்சமின்றி கலந்து கொள்ளலாம். அவர்களுக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டு உள்ளார்.