மிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் மாணவ மாணவிகளை தமிழக அரசு ஏமாற்றி வருகிறதோ என்ற ஐயம் மாணவ சமுதாயத்தினரிடையே எழுந்துள்ளது.

உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர்,   நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்துக்கு எந்த ஒரு ஆலோசனையையும் தமிழக அரசு கேட்கவில்லை என்று கூறியிருப்பது, தமிழக அரசு மக்களை ஏமாற்றி வருவது அம்பலமாகி உள்ளது.

தமிழகத்தில் மாநில மொழி பாடத்தில் பயில்பவர்கள், சிபிஎஸ்இ நடத்தும் அகில இந்திய நுழைவு தேர்வை எதிர்கொள்வது கடினமானது. நீட் தேர்வு சிபிஎஸ்இ பாட திட்டத்தில் நடைபெறுவதால், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் தமிழக மாணவர்கள் அதை எதிர்கொள்வது முடியாத காரியம்.

இந்த ஆண்டு  மத்திய கல்வி வாரியம் நடத்திய நீட் தேர்வில்,  தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய 83,359 மாணவர்களில் வெறும் 38.83 விழுக்காடு பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். அதேபோல் நீட் தேர்வு தர வரிசையில் முதல் 25 பேரில் ஒரு மாணவர்கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை எனபது வேதனையான விஷயம்.

தொடக்கத்தில் இந்த விஷயத்தில் அக்கறை காட்டாத தமிழக அரசு,  நீட் தேர்வு நடைபெற்று முடிந்தபிறகே, அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் பலத்த எதிர்ப்பை தொடர்ந்து இந்த விவகாரத்தில் அக்கறை காட்டியது.

இதுகுறித்து, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் தமிழக அமைச்சர்கள் டில்லியில் ஆலோசனை நடத்தினர். அவரும் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும் என்று கூறியிருந்தார்.

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசு, மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டது.

அதைத்தொடர்ந்த தற்போது தமிழக அரசு, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசாணை வெளியிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎஸ்டி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்துவிட்டது.

இதற்கிடையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் டில்லியில் முகாமிட்டு மத்திய அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து பேசி வருகின்றனர்.

இது சம்பந்தமாக கடந்த வாரம் பிரதமர் மோடியையும் சந்தித்து பேசினார் அமைச்சர் விஜயபாஸ்கர். தற்போதும் டில்லியில்தான் முகாமிட்டுள்ளார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்க அளிக்கப்படும் என்றும், விரைவில் நல்ல தகவல் வரும் என்று  தொடர்ந்து அமைச்சரும், தமிழக முதல்வரும் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி இந்த மாதத்திற்குள் மருத்துவ நுழைவுத்தேர்வு கலந்தாய்வு நடைபெற்று முடிவுபெற வேண்டும்.

ஆனால், மத்திய அரசு இதுவரை தமிழக அரசுக்கு சாதகமான முடிவை தெரிவிக்காத நிலையில், சென்னை ஐகோர்ட்டின் 85சதவிகித அரசாணை ரத்து  உத்தரவை எதிர்த்து  தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  விசாரணையின்போது  ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால்,

 நீட் அவசர சட்டத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு கொடுத்துள்ளது.

ஆனால் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்துக்கு எந்த ஒரு ஆலோசனையையும் தமிழக அரசு கேட்கவில்லை என அதிர்ச்சி தகவலை கூறினார்.

மத்திய அரசின் இந்த வாதம் தமிழக மக்களுக்கும், மாணவ சமுதாயத்திற்கும் பேரிடியாக வந்துள்ளது.

தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் தமிழகத்திற்கு, நீட் தேர்வில் இருந்த விலக்கு கிடைக்கும் என்றும், தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு அனுமதி கிடைத்துவிடும் என்றும் ஒவ்வொரு நாளும் சொல்லி வரும் வேளையில், மத்திய அரசின் இந்த தகவல், தமிழக அமைச்சர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதும்,  பொய்யான தகவல்களை மாணவ சமுதாயத்திற்கு சொல்லி வருவதும்  வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதன் காரணமாக  மாணவ சமுதாயங்கள் கொதித்துபோய் உள்ளனர்.

இதனால் நீட் அவசர சட்டம் பற்றி தமிழக மக்களுக்கு பொய்யான தகவலை தமிழக அமைச்சர்கள் தெரிவித்துள்ளது அம்பலமாகியுள்ளது.

நீட் தேர்வு தொடர்பாக, அமைச்சர்களை சந்திப்பதாக கூறும் அமைச்சர் விஜயபாஸ்கர், தன் மீதான வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றே டில்லியில் பல்வேறு துறை அமைச்சர்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது…