சென்னை:

மிழக்ததில் நீட் தேர்வு காரணமாக கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவு குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது என்றும்,  கிராமப்புற மாணவர்கள் மருத்துவர் ஆவதை பாஜக விரும்ப வில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு திணித்து, கிராமப்புற மற்றும் நகர்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை சீர்குலைத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டது. அதைத்தொடர்ந்து உச்சநீதி மன்றமும் தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று கூறிவிட்டது.

இதன் காரணமாக தமிழகத்தில், தமிழக கல்வி பாடத்திட்டத்தின்படி படித்த மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில்,மத்திய மாநில அரசுகளை கண்டித்து எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் சார்பில் இன்று  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன்  ஆகியோர் கூட்டாக  அறிக்கை விடுத்திருந்தனர் .

அதன்படி இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், கே.ஆர்.ராமசாமி, காதர் மொய்தீன், கனிமொழி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். ஆயிரக்கணக்கில் அனைத்துக்கட்சி தொண்டர்களும் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

கூட்டத்தில் பேசிய, சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

‘நீட் தேர்வு முறையால் தமிழகத்தின் சமூக நீதிக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இட ஒதுக்கீட்டுக் கொள்கை நசுக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த முயற்சியை தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

நீட் தேர்வால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு குழித்தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.  சமூக நீதியை தடுக்கவே பாஜக நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது. கிராமப்புற மாணவர்கள் மருத்துவர் ஆவதை பாஜக விரும்பவில்லை.

தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடங்களில் 5 பேர் மட்டுமே மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்.

நீட் விவகாரத்தில் நல்லது நடக்கும் என முதல்வர், அமைச்சர்கள் உறுதி அளித்தனர். ஆனால், அவர்களுக்கு மட்டுமே நல்லது நடந்துள்ளது.

மத்திய அரசிடம் அடி பணிந்து நிற்கும் குதிரைபேர ஆட்சியை விலக்கினால் மட்டுமே நாட்டுக்கு நல்லது நடக்கும். இதையே சபதமாக ஏற்று உறுதி கொள்வோம்’.

இவ்வாறு பேசினார்.