மருத்துவக்கல்வி நுழைவு தேர்வு (நீட்) அடுத்த ஆண்டு அமல்! தமிழக மாணவர்கள் நிலை…..?

புதுடெல்லி:

நாடு முழுவதும் உள்ள மருத்துவகல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் எனப்படும் தகுதி தேர்வுக்கான திருத்த மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்டன.

இதன் காரணமாக தமிழக மாணவர்களும், அடுத்த ஆண்டு முதல் மருத்துவக்கல்வி படிக்க “நீட்”எனப்படும் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகிறது.

இந்தியா முழுவதும் மருத்துவப்படிப்புகான இடங்களை தேர்வு செய்ய “நீட்” எனப்படும் தகுதித்தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

neet

இதனால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என பெரும்பாலான மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுதத்து, மத்திய அரசு இந்த ஆண்டு ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி இந்த ஆண்டு  மருத்துவ மாணவர்கள் தேர்வு நடத்திக்கொள்ளலாம் என அவசர சட்ட மசோதா, குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் பிறப்பித்தது.

இதற்கான திருத்த மசோதாக்கள் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே மக்களவையில் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவையிலும் தற்போது  நிறைவேற்றப்பட்டிருப்பது தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு பின்னடைவே.

இதன் காரணமாக அடுத்த ஆண்டு முதல், தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி இடங்கள் அனைத்தும், அகில இந்திய அளவில் பொதுவானதாகி விடும். தற்போது, தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. ஆனால், இனிமேல் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவக்கல்லூரியில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவையில் இந்த சட்டத்தை எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர்.

நவநீதிகிருஷ்ணன்  - கனிமொழி

அதிமுக  எம்.பி. நவநீத கிருஷ்ணன்: “நீட்” நுழைவுத் தேர்வு சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கை தன்னிச்சையானது; சட்டவிரோதமானது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும், ஏழை மாணவர்களும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்காதவர்களும்  இந்த சட்டத்தினால் பெரிதும் பாதிக்கக்கப்படுவர் என்றார்.

திமுக எம்.பி. கனிமொழி:  தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள்கள், சிபிஎஸ்இ அல்லது என்சிஇஆர்டி பாடமுறையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது;  இதனால், மற்ற மாநிலப் பாடத் திட்டங்களின் அடிப்படையில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவர்  எனவே, மாநிலப் பாடத் திட்டத்தின் அடிப்படையில் நன்றாகப் படித்து, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர ஏதுவாக மாற்றுத் தீர்வை மத்திய அரசு காண வேண்டும்’ என்றார்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் நரேந்திர பதானியா, ஐக்கிய ஜனதா தளம்  சரத் யாதவ், சமாஜவாதி எம்.பி. நரேஷ் அகர்வால், மார்க்சிஸ்ட் எம்.பி. கே.கே.ராகேஷ், பிஜு ஜனதா தளம்  சேர்ந்த திலீப் திர்கே, பகுஜன் சமாஜ் எம்.பி. எஸ்.சி.மிஸ்ரா இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அடுத்து பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்  ஜே.பி.நட்டா, “தனியார் கல்லூரிகளிலும் அடுத்த ஆண்டு முதல் “நீட்’ நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்’ என்றார்.

விவாதத்துக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத் திருத்த மசோதா மற்றும் பல் மருத்துவக் கல்வி சட்டத் திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.