நீட்: கடுமையான சோதனைகளுக்குப் பிறகு மாணவர்கள் தேர்வு அறைக்கு அனுமதி

 

நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களில் ஏ-பிரிவு ஹால் டிக்கெட் பெற்றவர்கள் தேர்வு மையங்களுக்குள் கடுமையான சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. இத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இந்த‍த் தேர்வுக்காக   2,255 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. மாணவ, மாணவிகளுக்கான ஹால் டிக்கெட் ஏ-பிரிவு, பி-பிரிவு என்று அளிக்கப்பட்டுள்ளது.

 

 

ஏ-பிரிவு மாணவர்கள் காலை 7.30 மணி முதல் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். காதணிகள், கொலுசுகள் அணிந்திருந்த மாணவிகள், அவற்றை கழற்றிய பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களுக்கான சோதனைகள் கடுமையாக நடைபெற்றுவருகிறது.

கலாச்சாரம் சார்ந்த உடைகள் அணியும் மாணவர்கள் 8.30 மணிக்கே தேர்வு அறைக்கு வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.