நீட் தேர்வு பாடங்களில் 0, -1 மதிப்பெண்கள் பெற்று மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்..!

நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் 0, -1 போன்ற மதிப்பெண்களை பெற்றிருந்த போதும் அவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது.  இத்தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் தலா 4 மதிப்பெண்கள் என மொத்தம் 720 மதிப்பெண்கள்.

இயற்பியல், வேதயியல், உயிரியல் போன்ற பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்ணை ஒவ்வொரு ஆண்டும் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ முடிவு செய்கிறது.  இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் 0, -1 மதிப்பெண்களை பெற்றிருந்த மாணவர்கள் கூட பணம் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லுரிகளில் மருத்துவம் பயின்று வருவது தெரியவந்திருக்கிறது.

 

தகுதி மதிப்பெண்களை பெற்றிருந்தால் போதும், தனித்தனியாக பாட வாரியாக தேர்ச்சி பெற வேண்டியதில்லை என்ற காரணத்தினால் அவர்களுக்கு தனியார் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது.

முதல் முறையாக நீட் அறிவிப்பு வெளியான நேரத்தில் குறைந்தபட்சம் நீட்தேர்வின் ஒவ்வாரு தாளிலும் மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தான் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து வெளியான அறிவிப்புகளில் பாடவாரியான தேர்ச்சி பற்றி கூறப்படவில்லை. மொத்தமாக குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என அறிவிப்பாணை வெளியானது. இந்நிலையில் கடந்த 2017-ஆம் வருடம் நீட் தேர்வில் 150-க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்று தற்போது மருத்துவம் படித்து வரும் பலரும் வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களில் பூஜ்யத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றது தெரியவந்திருக்கிறது.

இயற்பியலில்  3 மதிப்பெண்கள், வேதியியலில் 0 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் உயிரியல் பாடத்தில் 131 மதிப்பெண்கள் பெற்றதால், மொத்தமான தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களாக கருதப்படுகிறார்கள்.  இப்படிப்பட்ட மாணவர்கள் தனியார் கல்லூரியில் பல லட்சம் கொடுத்து மருத்துவம் படித்து வருகின்றனர்.

பெரும்பாலான இத்தகைய மாணவர்கள் டீம்ட் பல்கலைக்கழங்களிலே பயில்கின்றனர். இங்கு அப் பல்கலைக்கழகங்களே எம்பிபிஎஸ் இறுதித் தேர்வையும் நடத்துகின்றன. இவர்கள் இத்தகைய தேர்வில் தேர்ச்சி பெற்றால் பயிற்சி மருத்துவராக பணி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆக மாணவர்களின் தகுதி எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியே என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

மேலும், “இந்த நிலையில் சித்த ஆயுர்வேத மருத்துவ படிக்கும் நீட்  கொண்டுவருவது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றும் தெரிவிக்கிறார்கள்.