கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வை எழுத முடியாதவர்களுக்கு இன்று ‘நீட்’ தேர்வு…

சென்னை: கொரோனா முடக்கம்  காரணமாக, ஏற்கனவே நடைபெற்ற நீட்  தேர்வை எழுத முடியாத மாணாக்கர்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுபடி இன்று ‘நீட்’ தேர்வு நடைபெறுகிறது. அதையடுத்து வரும் 16ந்தேதி ரிசல்ட் வெளியாகிறது.
மருத்துவபடிப்பு நுழைவு தேர்வான நீட் தேர்வு,    கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதி நடைபெற்றது. தொற்று பரவல் நடவடிக்கை காரணமாக சரியான போக்குவரத்து இல்லாததால், ஏராளமான மாணவ மாணவிகள் தேர்வை எழுத முடியாமல் அவதிப்பட்டனர்.  தேர்வுக்கு நாடு முழுவதும்   15.97 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், 85-90 சதவீதம் பேர் மட்டுமே தேர்வுகள் எழுதினார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகளை அக்.16-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி  உள்ளது.
அதைத்தொடர்ந்து இன்று மீண்டும் நீட் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுதுவதை தவர விட்ட மாணாக்கர்கள் இன்று தேர்வை எழுதுகின்றனர்.