டில்லி,

நாடு முழுவதும் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நீட் போன்ற நுழைவு தேர்வு நடத்தலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

மருத்துவக்கல்விக்கு ஒரே மாதிரியான நீட் நுழைவு தேர்வை இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் மத்திய அரசு  நடைமுறைப்படுத்தி உள்ளது. அதேபோல் விரைவில் என்ஜீனியரிங் துறைக்கும் நாடு முழுவதும் ஒரே நுழைவு தேர்வு கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஒரே மாதிரியான நுழைவு தேர்வு நடத்தலாம் என்று உச்சநீதி மன்றத்துக்கு மத்தியஅரசு பரிந்துரைத்துள்ளது.

கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளை தேர்வு செய்ய, ‘நீட்’ போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்கள், 20 ஆயிரத்து 502 ஆகும். இதில் நான்காயிரத்து 552 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தற்போது,  இதுபோன்ற காலிப்பணியிடங்கள், உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாநில பணியாளர் தேர்வு வாரியங்கள் நடத்தும் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன.

இதற்கு மாற்று வழிமுறைகளை கண்டறியும்படி, சட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிடப் பட்டிருந்தது.

இதன்படி ஆய்வுகள் மேற்கொண்ட சட்ட அமைச்சகம், உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

மருத்துவ பட்டப்படிப்பு, மருத்துவ மேல்படிப்புகளுக்கு நீட் எனப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேபோல, கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்று அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வை, யு.பி.எஸ்.சி. வாயிலாக நடத்தலாம் அல்லது இதற்கென தனியாக ஒரு அமைப்பை உருவாக்கலாம் என்றும் கடிதத்தில் சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீதிபதிகள் நியமனத்துக்கு விரைவில் தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்பது தெளிவாகிறது.