நீட் மோசடி பகீர்:  குஜராத்தில் மட்டும் எளிதான கேள்விகள்!

சென்னை:

டந்து முடிந்த நீட் தேர்வில் பெரும் மோசடி நடந்துள்ளதாகவும், குஜராத் மாநிலத்திற்கு மட்டுமே எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு  நாடு முழுதும் நடந்தது.  இத் தேர்வை எழுதிய மாணவர்கள் பெரும்  கெடுபிடிகளுடன் நடத்தப்பட்டார்கள். இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுடன் தேர்வை எழுதினார்கள்.

இதற்கிடையே நீட் தேர்வுக்கும், மாணவர்கள் நடத்தப்பட்ட விதத்திற்கும் தமிழக அரசியல் தலைவர்கள் பலர்  எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நீட் தேர்வை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் நீட் தேர்வில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக
சமூக சமத்துவத்துவ மருத்துவ சங்க நிர்வாகி ரவீந்தரநாத் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்தரநாத், “நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு என்று கூறிவிட்டு வெவ்வேறு மாநிலங்களில் வேறு வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.   குஜராத் மாநிலத்தில் எளிமையான முறையில் கேள்வித்தாள் கேட்கப்பட்டிருக்கின்றன.  ஆகவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இதே போல கடந்த 2015ஆம் ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது உண்டு.

குஜராத் மாணவர்கள் அதிக அளவில் டாக்டர்கள் ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சதி நடந்துள்ளது.  மோசடியான நீட் தேர்வை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்” என்று ரவீந்தரநாத் கூறினார்.

மேலும் அவர், “நீட் தேர்வு பற்றி ஆரம்பம் முதலே தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தவறாக தகவல்களையே கூறி வருகிறார். இது தேசிய தகுதித்தேர்வா? குஜராத் தகுதித்தேர்வா என்ற கேள்வி எழுகிறது” என்றும் ரவீந்தரநாத் கேள்வி  தெரிவித்தார்.

நீட் தேர்வு பற்றி ரவீந்தரநாத் கூறியுள்ள புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  கல்வியாளர்கள்  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளனர்.