நீட் ஆள்மாறாட்டம் வழக்கு: ராகுல், பிரவீன் உள்பட 4 பேரின் நீதிமன்ற காவல் மேலும் 15நாள் நீடிப்பு

தேனி:

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி, தமிழக மருத்துவக்கல்லூரியில் இடம்பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த  ராகுல், பிரவீன் உள்பட 4 பேரின் நீதிமன்ற காவல் மேலும் 15நாள் நீடித்து நீதிபதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக அவர்களின்  நீதிமன்றக்காவல் வருகிற 25-ந் தேதி வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த சென்னை மருத்துவரின் மகன்,  மாணவர் உதித் சூர்யா விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து, மேலும் பலர் ஆள்மாறாட்டம் செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர் ராகுல், அவருக்கு உடந்தையாக இருந்த தந்தை டேவிஸ், மற்றொரு மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஏற்கனவே தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வந்த இர்பான், அவரது தந்தை முகமது சபி ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள  மாணவர்கள் ராகுல், பிரவீன், அவர்களது தந்தை டேவிஸ், சரவணன் ஆகியோர் ஜாமீன் கேட்டு தேனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் இன்று ஆவணங்கள் தாக்கல் செய்வதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, 4 பேரை ஜாமினில் வெளியே விட அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,   அவர்கள் 4 பேரின் நீதிமன்ற காவலை வருகிற 25-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.

முன்னதாக இவ்வழக்கில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசனுக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.