சென்னை:

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவப்படிப்பில் பலர் சேர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், முதலாண்டு மாணவ மாணவிகளின் கைரேகையை பதிவு செய்து விசாரணை நடத்த மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த  மாணவர்கள் உதித்சூர்யா, ராகுல், பிரவின், இர்பான், பிரியங்கா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த ஆள்மாறாட்டம் தொடர்பான புகார் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், மருத்துவக்கல்வி இயக்குனரகம், நடப்பு ஆண்டில் மருத்துவம் படிக்க சேர்ந்துள்ள மாணவ மாணவி களின் கைரேகையை பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.

ருத்துவ கல்வி இயக்குனரகம், அனைத்து மருத்துவக்கல்லூரி முதவர்களுக்கும் இ.மெயில்மூலம்  சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், “முதலாண்டு மருத்துவ மாணவர்களின் மூன்று கைரேகை பதிவுகளை சேகரிக்க வேண்டும் என்றும், இந்த  கைரேகைப் பதிவுகளை மாணவர்கள் டீன் அலுவலகத்தில் வைத்து பதிவு செய்ய வேண்டும், இந்த நிகழ்வு, அனாடமி, பிசியாலஜி, பயோ கெமிஸ்ட்ரி ஆகிய மூன்று துறைகளின் பேராசிரியர்கள் முன்னிலையில்  நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

மேலும், கைரேகைகள் பதிவு முடிந்ததும், 5 நாட்களுக்குள் முடித்து, அதை ‘சீல்’ வைத்த உறையில் வைத்து அனுப்ப வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

“மாணவர்களின் கைரேகை பதிவுகளை தடயவியல் பரிசோதனை செய்வதன் மூலம் ஆள் மாறாட்டம் செய்து மாணவர்கள் யாராவது மருத்துவ படிப்பில் சேர்ந்து இருக்கிறார்களா? என்பதை துல்லியமாக கண்டுபிடித்து விட முடியும்” என்பதால், மருத்துவக்கல்வி இயக்குனரகம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.