மதுரை:

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் கைதான மாணவருக்கு நிபந்தனை ஜாமீன்  வழக்கிய உயர்நீதிமன்றம் மதுரை கிளை, அவரது  தந்தைக்கு வழங்க மறுத்து விட்டது.

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக உதித்சூர்யா, ராகுல், பிரவின், இர்பான், பிரியங்கா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் பெற்றோர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளுக்கு தேசிய தேர்வு முகமை மற்றும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில் நீட்  தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா உள்பட சிலர் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது கடந்த 15ந்தேதி விசாரணை நடத்திய உயர்நீதி மன்றம் மதுரை கிளை  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “உதித்சூர்யா வழக்கில் அவரது தந்தை வெங்கடேசன்தான் உண்மையான வில்லன். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். வெங்கடேசனை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்?” என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முறைகேட்டிற்கு துணையாக இருந்தவர்கள் குறித்த முழு தகவலையும் மாணவரின் தந்தை தெரிவிக்கவில்லை என்றும், விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தைப் பார்த்து, நீட்தேர்வு ஆள்மாறாட்டத்திற்கு திட்டம் போட்டது போல உள்ளது என்று கருத்து தெரிவித்த நீதிபதி, மாணவன் உதித்சூர்யாவுக்கு  நிபந்தனை ஜாமின் வழங்கினார். ஆனால், அவரது தந்தைக்கு  ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, விசாரணைக்கு ஒத்துழைக்காத  போக்கை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, முறைகேட்டில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிவது அவசியம் என தெரிவித்தார்.

வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் எதற்காக ஜாமீன் வழங்க வேண்டும்? எனவும் அவர் மாணவரின் தந்தையிடம் கேள்வி எழுப்பினார்.

மாணவனின் வயது மற்றும் மன அழுத்தப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்கப்படுவதாகவும், மாணவர்,  மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன்பாக தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டுமென்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.