சென்னை:

மாணவர் உதித்சூர்யாவின் தந்தையே வில்லன் என்று நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் சென்னை  உயர் நீதி மன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. மேலும், உதித் சூர்யா தந்தையை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன் என்றும், நீட் விவகாரத்தில் மன்னிக்க முடியாத குற்றம் நடைபெற்றுள்ளது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக உதித்சூர்யா, ராகுல், பிரவின், இர்பான், பிரியங்கா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த முறைகேடு மூலம் மேலும் பல மாணவ மாணவிகள் மருத்துவக் கல்வியில் சேர்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முதலாவதாக கைது செய்யப்பட்ட மாணவர் உதிர்சூர்யா, மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஏற்கனவே உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் மாணவர் உதித்சூர்யா ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மது, உயர்நீதி மன்றம் மதுரை கிளை  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையைத் தொடர்ந்து , “உதித்சூர்யா வழக்கில் அவரது தந்தை வெங்கடேசன்தான் உண்மையான வில்லன். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். வெங்கடேசனை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்?” என சிபிசிஐடிக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து சிபிசிஐடி தரப்பில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்று கூறப்பட்டது.

அப்போது கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, நீட் விவகாரத்தில் மன்னிக்க முடியாத குற்றம் நடைபெற்றுள்ளது என்று கூறியவர்,  வழக்கு விசாரணையை அக். 17-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.