சென்னை:

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவப்படிப்பில் பலர் சேர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், முதலாண்டு மாணவ மாணவிகளின்விவரங்களை மீண்டும் சரிபார்க்க தமிழகஅரசு உத்தரவ விட்டு உள்ளது. ஏற்கனவே மருத்துவக் கல்வி இயக்குனரகம் முதலாண்டு மாணவ மாணவிகளின் கைரேகையை சேகரித்து அனுப்ப உத்தர விட்டுள்ள நிலையில், தற்போது தமிழகஅரசு மீண்டும் சரிபார்க்க அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. நடப்பாண்டில் பல மாணவர்கள், ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்க சேர்ந்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த  மாணவர்கள் உதித்சூர்யா, ராகுல், பிரவின், இர்பான், பிரியங்கா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.இந்தவிவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆள்மாறாட்டம் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், சென்னை உயர்நீதி மன்றமும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதற்கிடையில், சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுப்படி தேசிய தேர்வு முகமை, வெளி மாநிலங்களில் தேர்வு எழுதிய 19 தமிழக மாணவர்களின் விவரங்களை வழங்கி உள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எம்.பி.பிஎஸ் கவுன்சிலிங்

நடப்பு ஆண்டில் மருத்துவம் படிக்க சேர்ந்துள்ள மாணவ மாணவி களின் கைரேகையை பதிவு செய்து விசாரணை நடத்த மருத்துவக்கல்வி இயக்குனரகம், உத்தரவிட்டு உள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பல்வேறு எம்பிபிஎஸ் படிப்புகளில் அனுமதிக்கப்பட்ட 4,250 மாணவர்களின் கட்டைவிரல் பதிவை சிபி-சிஐடிக்கு ஒப்படைக்குமாறு தேசிய சோதனை நிறுவனத்திற்கு (என்.டி.ஏ) மெட்ராஸ் உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

2019-20 கல்வியாண்டில் அனுமதிக்கப்பட்ட அனைத்து எம்.பி.பி.எஸ் மாணவர்களின் சுயவிவரங்களையும் மீண்டும் சரிபார்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், முதலாண்டு மாணவ மாணவிகளின் ஆவனங்களை மீண்டும் சரிபார்க்க அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பான நீதிமன்ற விசாரணையின்போது,  எஸ்சி / எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை ஆள்மாறாட்டம் மூலம் மாணவர்கள் பெற்றுள்ளது தெரிய வந்தால், அவர்கள்மீது , பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் (அட்டூழியங்களைத் தடுக்கும்) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு வரும் 24ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.