தேனி

தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர்  நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த  புகாரை அளித்ததையொட்டி தமக்கு மிரட்டல்கள் வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிபிசிஐடி காவல்துறை நடத்திய விசாரணையில், மேலும் சிலர் நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பது தெரியவந்தது.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் சென்னையைச் சேர்ந்த 3 மாணவர்களைப் பிடித்து சிபிசிஐடி காவல்துறை விசாரித்தனர். இந்த விசாரணையில், மாணவர்கள் 3 பேரும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  அவர்களையும் அவர்கள் பெற்றோர்களையும்  ஆள்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல், சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்குப் பயிற்சி அளித்துள்ள அனைத்து மையங்களுக்கும் காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த மையங்களில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தேசிய தேர்வு முகமைக்கு காவல்துறையினர் கடிதம் அனுப்பி தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களின் விபரங்களை அளிக்குமாறு வலியுறுத்தி உள்ளனர்.

தேனி மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் வேல்முருகன் மற்றும் திருவேங்கடம் ஆகிய இரண்டு பேராசிரியர்கள், மாணவன் உதித்சூர்யாவுக்கு உதவிகள் செய்ததாகவும், வருகைப் பதிவேட்டைத் திருத்திய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கானா விலக்கு காவல் நிலையத்தில் மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புகார் மனு அளித்துள்ளார்.   அத்துடன்  நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தனக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும், தொலைப்பேசி மூலம் பல மிரட்டல்கள் வருவதால் பாதுகாப்பு அளிக்குமாறும் புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.