நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்: புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி:

நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளுக்கு இடையே நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை ஒத்திவைக்க மறுத்த மத்திய அரசு, ஒத்திவைக்கவும் அனுமதி அளிக்கவில்லை. இதனால் பல மாணவர்கள் எப்படி தேர்வை எதிர்கொள்வார்கள் என வெகுவாக கேள்வி எழுந்துள்ளது.

மருத்துவ படிப்புக்கான இந்த நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத மாணவர்கள் எடுக்கும் ஒரே முடிவு தற்கொலை தான். பயமின்றி தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள் என கல்வியலாளர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், தோல்வி அடைந்து விட்டால் எதிர்காலம் என்ன ஆகும் என எண்ணும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதே முடிவை தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் மாணவர் விக்னேஷும், இன்று மாணவி ஜோதிஸ்ரீ துர்காவும் எடுத்தனர். இவ்வாறு தமிழகத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் மாணவர்களின் மரணம் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் நீட் தேர்வால் ஏற்பட்ட மரணங்கள் தற்கொலை இல்லை, கொலை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மாணவர்களின் மரணத்துக்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என தெரிவித்த அவர், மாணவர்களின் நலனை மத்திய அரசும் பிரதமரும் காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.