சென்னை:

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அதிகாரிகள் நேரில் ஒப்படைத்தனர்.

வரும் மே 7-ம் தேதி முதல் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு  அறிவித்தது. இத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதற்காக, தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி 31-ம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு மாநில ஆளுநரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப் பட்டது.

இந்நிலையில் ஆளுநரின் அனுமதியை பெற்ற தமிழக அரசு, இந்த மசோதாவை தமிழக சுகாதாரத் துறை துணை செயலாளர் கந்தசாமி, சார்பு செயலாளர் செல்வராஜ் ஆகியோர் நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம்  ஒப்படைத்தனர்.

கல்வி பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் தமிழக அரசின் ‘நீட்’ மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அவசியமாகிறது.

மத்திய உள்துறை அமைச்சகம், தமிழகத்தின் ‘நீட்’ மசோதாவை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு அனுப்பிவைத்து அவற்றின் கருத்துகளை கேட்கும்.  அவற்றின் கருத்துகளை கேட்ட பிறகு உள்துறை அமைச்சகம் தனது கருத்தையும் சேர்க்கும். இறுதியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். இந்த ஒப்புதலுக்குப் பிறகே ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும்.