நீட் தேர்வு: சிபிஎஸ்இ-க்கு மதுரை உயர் நீதிமன்றம் ‘கிடுக்கிப்பிடி’ கேள்வி
மதுரை:
மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்திய மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு வினாத்தாளில், தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட வினாக்களில் 40க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக உள்ளதை குறிப்பிட்டு தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை சிபிஎஸ்இ கல்வி வாரியத்துக்கு கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பி உள்ளது.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கேட்டும், நீட் தேர்வு வினாத்தாள், தமிழில் மொழி மாற்றம் செய்யப் பட்டதில் 40க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக இருப்பதாகவும், அதற்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்று கூறி கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் எம்.பி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் கடந்த மாதம் (ஜூன்) 4ந்தேதி விசாரணைக்கு வர இருந்த நிலையில், சிபிஎஸ்இ அவசரம் அவசரமாக உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து, உத்தரவு பெற்று நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
இதில் தமிழ் மொழி மாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. எனவே அந்த வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது தமிழ் மொழி வினாத்தாளில் குளறுபடி இருப்பதாகவும், ஆங்கில வினாத்தாள் தான் இறுதியானது. அதன் அடிப்படையில் அகில இந்திய அளவில் நீட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது.
இந்த நிலையில், மதுரை உயர்நீதி மன்றம் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை உயர்நீதி மன்ற நீதிபதிகள், சிபிஎஸ்இ கல்வி வாரியத்துக்கு அதிரடியாக 4 கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
அவைகள்,
1. ஏந்த அடிப்படையில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படுகிறது. ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் போது பின்பற்றப்படும் விதிகள் என்ன?
2. நீட் தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கான மொழி மாற்ற வார்த்தைகள் எந்த அகராதியிலிருந்து பயன்படுத்தப்படுகிறது.
3. சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இணையாக தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறதா?
4. தமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் எடுக்கப்படுகின்றது
இந்த கேள்விகளுக்கு சிபிஎஸ்இ கல்வி வாரியம் பதில் அளிக்க வேண்டும் என்றும், போட்டி தேர்வு என்பது அனைவருக்கும் சமமானதாகவே இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.