சென்னை:

சென்னை கிண்டி கத்திப்பாரா ஜங்ஷனில் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தமிழக்ததில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போராட்டம் காரணமாக பல கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் கல்லூரி மாணவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர், பலத்த பாதுகாப்பையும் மீறி,  ஜெயலலிதா சமாதி முன் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் , சென்னையின் மையப்பகுதியான கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சில மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.  கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் விரைந்துவந்து மாணவர்களை கைது செய்து, போக்குவரத்தை சரி செய்தனர்.

அதேபோல், சட்டக்கல்லூரி மாணவர்கள், போலீஸ் தடுப்பையும் மீறி ஐகோர்ட்டுக்கு எதிரே  சாலையின் குறுக்கே நின்று கொண்டு போராட்டம் நடத்தியதால் பாரிமுனை பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நீட்டுக்கு எதிரான தமிழக மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தும், அதிரடியாகவும் நடைபெற்று வருகிறது.