16ந்தேதிக்கு பிறகே நீட் தேர்வு முடிவு வெளியீடு!

டில்லி,

ருத்துவக்கல்விக்கான நுழைவு தேர்வு முடிவு வெளியாக மேலும் சில நாட்கள் தாமதமாகும் என தெரிகிறது.

மருத்துவ நுழைவுதேர்வு வினாத்தாளில், மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டிருப்பது குறித்து தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கிளை, தேர்வு முடிவு வெளியிட தடை விதித்திருந்தது. அதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ கல்வி வாரியம் முறையீடு செய்தது. சுப்ரீம் கோர்ட்டு மதுரை உள்பட பல்வேறு மாநில நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து, நீட் தேர்வு முடிவு வெளியிட சிபிஎஸ்இ கல்வி வாரியத்துக்கு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், தேர்வு முடிவு இன்றோ, நாளையோ வெளியாகும் என்றும் மாணவர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், தேர்வு முடிவு வெளியாக மேலும் ஒருசில நாட்கள் தாமதமாகலாம் என தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் ஓ.எம்.ஆர். விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதி சி.பி.எஸ்.இ. இணைய தளத்தில் 3 நாட்களுக்கு வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் 2 நாட்களுக்கு மட்டுமே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது ஜூன் 13-ந் தேதி (இன்று) ஓ.எம்.ஆர். விடைத்தாள் பிரதி வெளியிடப்படும்.

இதில் ஆட்சேபனை இருந்தால் 14-ந் தேதி (நாளை) மாலை 5 மணிக்குள் இணைய தளம் வழியாக தெரிவிக்க வேண்டும்.

இதையடுத்து நீட் தேர்வுக்கான விடைகள் ஜூன் 15-ந் தேதி வெளியிடப்படும். இதில் ஆட்சேபனை இருந்தால் 16-ந் தேதி மாலை 5 மணிக்குள் அதை தெரிவிக்க வேண்டும்.

இந்த 2 நடைமுறைகளும் முடிந்த பிறகு ஒரு வாரத்துக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.