நீட் தேர்வு முடிவுகள் – குளறுபடிகள் குறித்து வெளியாகும் புகார்கள்!

சென்னை: சர்ச்சைக்குரிய நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டதில், குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக, அத்தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை மீது புகார் தெரிவித்துள்ளார் மஞ்சு என்ற அரியலூர் மாணவி.

இந்நிலையில், தனது விடைத்தாளில் விடைகள் மாறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் கோவை மாணவர் ஒருவர்.

கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை நாகை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஒரு பள்ளியில் மஞ்சு எழுதியுள்ளார். நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானதில் மஞ்சு 37 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார்.

மாணவில் மஞ்சு கூறியுள்ளதாவது, “நீட் தேர்வில் 3 வினாக்களுக்கு மட்டுமே நான் பதில் எழுதவில்லை. 680 மதிப்பெண்கள் கிடைக்கும் என நான் எதிர்பார்த்திருந்த நிலையில், வெறும் 37 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இது, நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் 3 வினாக்களுக்கு மட்டுமே பதிலளிக்காத நிலையில், 7 வினாக்களுக்கு பதிலளிக்கவில்லை என்று தேர்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, எனது விடைத்தாள் (ஓஎம்ஆர் ஷீட்) மாற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும், இதுகுறித்து யாரிடம் புகார் தெரிவிப்பது எனத் தெரியவில்லை” என்றார்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதற்கு முன்பாக நீட் தேர்வின் ஓஎம்ஆர் விடைத்தாள் பிரதி, விடைகள் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டன. அப்போது, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த மாணவர் மனோஜ், தனது விடைத்தாளை பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளார்.

இந்நிலையில், தேர்வு முடிவு வெளியான நேற்று முன்தினம் இரவு மீண்டும் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளார். இரண்டிலும் விடைகள் மாறியிருந்தது. இரண்டு விடைத்தாள் நகல்களிலும் எனது பதிவெண், கையெழுத்து ஆகியவை ஒரே மாதிரியாக உள்ளன.

ஆனால், ஒரே கேள்விக்கு முதலில் வெளியிடப்பட்ட விடைத்தாள் பிரதியில் ஒரு பதிலும், தற்போது பதிவிறக்கம் செய்த விடைத்தாளில் வேறு ஒரு பதிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பெரும்பாலான கேள்விகளுக்கான பதில்கள் மாறியுள்ளன” என்றுள்ளார் அந்த மாணவர்.