நீட்- தவறான வினா வழக்கு: உச்சநீதி மன்றத்தில் கம்யூ. டி.கே.ரங்கராஜன் கேவியட் மனு

டில்லி:

நீட் தேர்வு வினாக்களை  தமிழில்  மொழி மாற்றம் செய்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை 196 கருணை மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இ-க்கு  உத்தரவிட்டி ருந்தது.

இந்த நிலையில், வழக்கு தொடர்பாக கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த உச்ச நீதிமன்றத்தில் டி.கே.ரங்கராஜன் உச்சநீதி மன்றத்தில்  கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., டி கே,ரங்கராஜன் உயர்நீதி மன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  நீட் தேர்வில் தமிழில் மொழிமாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தது. தமிழில் மொழிமாற்றம் செய்த வினாத்தாளில் இயற்பியல் பாடப்பிரிவில் 10 வினாக்களும், வேதியியல் பாடப்பிரிவில் 6 வினாக்களும், உயிரியல் பாடப்பிரிவில் 33 வினாக்களும் தவறாக கேட்கப்பட்டிருந்தது.இதன் காரணமாக  தமிழ் மொழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தமிழில் மொழிமாற்றம் செய்யபட்ட வினாதாளில் தவறாக கேட்கபட்டிருந்த 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை முடிவடைந்த நிலையில்,  உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.

தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 49 வினாக்களுக்கு 196 மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு மருத்துவ கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட்டது.

மதுரை உயர்நீதிமன்ற கிளையின் இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று  டி.கே.ரங்கராஜன் இன்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.