நீட் தேர்வு: மத்தியஅரசு மீது தமிழகஅரசு பகிரங்க குற்றச்சாட்டு!

சென்னை,

மிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ‘நீட்’ தேர்வு மசோதாவை, மத்திய அரசு  ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை  அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

சட்டசபையில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு ‘நீட்’  மருத்துவ நுழைவு தேர்வு குறித்து கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

அப்போது நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் நிலை என்ன என்றும், நீட் நுழைவுத்தேர்வு வேண்டுமா? வேண்டாமா?  சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டதே? அதன் நிலைமை என்ன என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு தமிழக சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்  அளித்தார்,

அப்போது,   ‘‘நீட் நுழைவுத் தேர்வில் இருந்து மாநில அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற அம்மாவின் கொள்கையில் தெளிவாக உள்ளோம். இதற்காக 2 மசோதா நிறைவேற்றினோம். அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால் மத்திய அரசு, இதுவரை தமிழக  மசோதாக்களை ஜனாதிபதியிடம் அனுப்பவில்லை என்று மத்திய அரசு மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மேலும், தமிழக மசோதா குறித்து, மத்திய உள்துறை சட்டப் பிரிவில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே 2 முறை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார் என்று கூறினார்.

ஒருசில நாளில் வெளியாக இருக்கும் நீட் தேர்வு முடிவில், ஏழை,  கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக விகிதாச்சார உள் ஒதுக்கீடு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது’’ என்றார்.

உடனே துரைமுருகன் (தி.மு.க.) எழுந்து, ‘‘ஆபரே‌ஷன் சக்சஸ். பே‌ஷண்ட் டெத்’’ என்று சொல்வது போல் உங்கள் கருத்து உள்ளது. இன்னும் ஏன் கால தாமதம் செய்கிறீர்கள். அங்கே போய் உட்கார்ந்து கேட்க வேண்டாமா’’ என்று ஆவேசமாக பேசினார்.

இதற்கு பதில் அளித்த  அமைச்சர் தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர், ‘‘தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகித்தபோது என்ன செய்தீர்கள். காவிரி ஆணையம் அமைக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? நீட் பிரச்சினைக்கு காரணமே காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி அரசு தான்’’ என்று குற்றம் சாட்டினர்.

உடனே துரைமுருகன் எழுந்து, ‘‘நாங்கள் செய்யவில்லை என்பதற்காகத்தான் உங்களை உட்கார வைத்தார்கள். நீங்களும் செய்யாவிட்டால் எப்படி? என்றார்.

இதன் காரணமாக சபையில் சிரிப்பொலி எழுந்தது.