சென்னை,

நாடு முழுவதும்  மருத்துவ படிப்புகளுக்காக, தேசிய அளவில் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு மே 7ந்தேதி நடைபெற இருக்கிறது.

இந்த ஆண்டு  தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம் நடக்கும் என மத்திய அமைச்சர் ஜே பி நட்டா கூறினார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தில் கட்டாயம் நீட் தேர்வு நடக்கும் என்றார்.

மருத்துவ படிப்புகளுக்காக, தேசிய அளவில் நடத்தப்படும் ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் அவசர சட்டம் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரவில்லை.

அதேபோல், மத்தியஅரசும் ஒப்புதல் அளிக்க முடியாது என்று பாராளுமன்றத்தில் ஏற்கனவே அறிவித்து விட்டது.

இதன் காரணமாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கோர்ட்டும் நீட் தேர்வுக்கு அப்ளை செய்ய 5 நாட்கள் அவகாசம் கொடுத்தது. ஆனால், நீட் தேர்வில் இருந்து விலக்கு தர முடியாது என்று கூறிவிட்டது.

இந்நிலையில், இன்று சென்னை வந்த மத்திய அமைச்சரும் தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று கூறினார். மேலும், இந்த தேர்வில் பங்கேற்கும் கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கலாம் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இந்தாண்டு தமிழகத்தில் இருந்து  நீட் தேர்வுக்கு 88, 478 தமிழக மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.