திருப்பூர்,

ந்தியாவை பாதுகாக்க நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறி உள்ளார்.

தமிழகத்தில் நீட் திணிப்பு என்பது இந்தியா என்ற கருத்தாக்கத்துக்கு எதிரானது. இதை எதிர்த்து போராடுவது என்பது  மருத்துவக் கல்விக்கான போராட்டம் மட்டுமல்ல, கூட்டாட்சி தத்துவத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்று கூறி உள்ளார்.

திருப்பூரில் நடைபெற்ற  கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு கருத்தரங்கில், கல்வியில் பறிபோகும் கூட்டாட்சிக் கொள்கை என்ற தலைப்பில் பிரின்ஸ் கஜேந்திரபாபு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

நமது நாட்டில் ஏற்கனவே நடைபெற்றுள்ள, ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன், எய்ம்ஸ் சரவணன் தற்போதைய அனிதா போன்றோர்களின்  மரணங்களை பார்க்கும்போது, இவை   ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது.

ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 3ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, குடும்பம் பொதுநலம் குறித்த நிலைக்குழுவின் அறிக்கையில்,  தனியார் மருத்துவக் கல்லூரிகள் பெருகியுள்ள நிலையில் பணம் படைத்தோருக்குக் கல்வி, திறம் படைத்தோருக்கு கல்வியில்லை. இந்த நிலையை மாற்றவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளை கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து,  நாடு முழுவதும் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த ஆலோசித்து வருவதாக சுகாதாரத் துறை செயலர் குறிப்பிட்டிருக்கிறார்.

அப்படியொரு தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டால், மாநில அரசுகளின் கோரிக்கைகளின்படி, அவர்களுக்கு விலக்கும் அளிக்க வேண்டும் என்று  பேராசிரியர் ரஞ்சன்ராய் சௌத்ரிவல்லுநர் குழு அறிக்கையில்  கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற, மாடர்ன் டென்டல் கல்லூரி வழக்கில், 5பேர் கொண்ட உச்சநீதி மன்ற பெஞ்சு  மருத்துவ கல்வி சேர்க்கையை ஒழுங்குபடுத்த மத்திய அரசுக்கு கூறியது.

மேலும், இதுபோன்ற தேர்வு நடைமுறைக்கு வரும்போது, மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடு ஏற்படுமானால், அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 245-ன் வழிகாட்டுதலின்படி தீர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு மாநிலத்தில் மருத்துவ கல்லூரி சேர்க்கை நடைமுறையை, அம்மாநிலத்தில் இருக்கும் சமத்துவமான வாய்ப்புச் சூழல் மாநில சட்டமன்றத்துக்குத்தான் தெளிவாகத் தெரியும். எனவே மாநில சட்டமன்றமே அதை உருவாக்க முடியும், அதுவே சட்டமியற்ற சரியான அமைப்பு என்றும் நீதிமன்றம் தீர்ப்புக் கூறி உள்ளது.

இப்படி இருக்கையில், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும்  நீட் எதிர்ப்பு போராட்டம் என்பது, ஏதோ மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எதிரான போராட்டமல்ல. இது  கூட்டாட்சித் தத்துவத்தைக் காக்கின்ற போராட்டம்.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரப் பகிர்வு இருக்கிறது. இதில் மாநில அரசின் அதிகார எல்லையை மத்திய அரசு பறிக்கக் கூடாது என்பதற்கும், இந்தியா என்ற கோட்பாட்டைக் காப்பதற்குமான போராட்டம் ஆகும். அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், இந்திய மக்களாகிய நாங்கள் என்றுதான் போடப்பட்டுள்ளது.

இந்தியாவின் குடிமக்கள் என ஏன் குறிக்கப்படவில்லை என்ற விவாதம் நடைபெற்றபோது, இந்தியா இன்னும் ஒரு தேசமாக உருவாகவில்லை என்று அப்போது அம்பேத்கர் பதிலளித்தார். அதேபோல் இந்தியா கூட்டாட்சி அடிப்படையிலானதாக இருந்தாலும் இந்திய கூட்டரசு எனக் குறிக்கப்படாமல் இந்திய ஒன்றிய அரசு என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் காரணமாகவே, இந்தியாவில்எ ந்த மாநிலமும் தனியாக  பிரிந்து போக முடியாது, தனியாக அரசியல் அமைப்புச் சட்டமும் நிறைவேற்ற முடியாது. அதுபோல மாநில தேவைகளுக்கான சட்டம் இயற்றும் உரிமை மாநில அரசுக்குத் தான் உண்டு என்றும் அம்பேத்கார் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா  பல்வேறு மொழி, பண்பாட்டு வேறுபாடுகள் கொண்ட மக்களின் கூட்டமைப்பு. இங்கு   ஒவ்வொரு வரின் உரிமையையும், அவர்களது வேறுபாடுகளையும் அங்கீகரிக்கும்போதுதான் ஒற்றுமை சாத்தியம்.

அதுபோல ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒவ்வொரு மொழிக்கும் சமத்துவமான கற்றல் வாய்ப்பு வேண்டும். அப்படி இருந்தால்தான் ஒன்றியிருக்கும் இந்திய ஒன்றியமாக இருக்க வாய்ப்பு ஏற்படும். ஏக இந்தியா, ஏகப் பாடத்திட்டம், ஏக மொழி என்பது சரியல்ல.

ஒவ்வொரு மாநிலத்திலும் பாடத்திட்டம் வெவ்வேறானது என்பது வேறு, தரமற்றது என்பது வேறு.

நீட் நுழைவுத் தேர்வில் தமிழகத்திலும், குஜராத்திலும் வெவ்வேறு கேள்வித் தாள்கள் என்பதால் தான் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்தது.

ஆனால் சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்துக்குச் சென்று அந்த தடையை நீக்கியது. வழக்கின் உள்விவ காரத்தை கவனிக்காமல் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம், அதன்பிற்பாடு, ஏன் வெவ்வேறு கேள்வித்தாள்கள் என்று இப்போது கேள்வி எழுப்புகிறது.

சிபிஎஸ்இ பாடத்திட்டம் போக, சிபிஎஸ்இ இன்டர்நேஷனல் பாடத்திட்டம் என்று இரண்டு வகை யான பாடத்திட்டங்களை வைத்திருக்கின்றனர். ஒரே பன்னாட்டு நிறுவனம் சோப்பு, பற்பசை போன்றவற்றை சந்தையில் வெவ்வேறு பெயர்களை விற்பனை செய்து, வேறு போட்டியாளர்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதைப் போல, கல்வியை சந்தையாக்கி அதில் சிபிஎஸ்இ என்ற நிலை மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக, இன்னொருவர் போட்டியிடக் கூடாது என்று இருவித பாடத்திட்டத்தை வைத்துள்ளனர்.

இது எந்தவிதத்தில் நியாயம்? மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு என்று தான் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தது. ஆனால் தேசிய தகுதித் தேர்வு என்று வைத்திருக்கின்றனர். நுழைவுத் தேர்வை தகுதித் தேர்வு என மாற்றியது ஏன்? இதன் மூலம் மாநில பாடத்திட்டம் தகுதியற்றது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

அத்துடன் மாநில அளவில் மொத்த மருத்துவக் கல்வி இடத்தில், அகில இந்திய ஒதுக்கீடு 15 சதவிகிதம் என்பது மாநிலங்கள் வழங்கியதாகும். ஆனால் அதில் வெளிநாட்டினர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆகியோருக்கு இடம் வழங்குவதாகக் கூறியுள்ளனர்.

இதனால் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவர்கள், மாநில ஒதுக்கீட்டிற்குள் நுழைவார்கள், எனவே மாநில ஒதுக்கீட்டில் வாய்ப்பு பெறுவோர் அதில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.

ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்த 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்டனர். வாட் வரி விதிப்புக்கு 5 ஆண்டு காலம் எடுத்துக் கொண்டனர். ஆனால் நீட் தேர்வை மட்டும் ஏன் இவ்வளவு அவசரமாகத் திணிக்கின்றனர்.

மாநில அரசுகளுடன் பேசி, விவாதிப்பதற்கு நேரம் கொடுக்காமல் அதிரடியாக முடிவு செய்வது நியாயமா? அதுவும் 15 வயதுள்ள குழந்தைகளைப் பற்றி முடிவெடுக்கும் இந்த விசயத்தில் குறைந்தபட்ச ஜனநாயக மாண்பு கூட இல்லாமல் அதிரடியாக செயல்பட்டது எப்படிச் சரியாகும்?

மருத்துவ சேர்க்கைக்கு பலவித நடைமுறைகளை அமல்படுத்திய அனுபவம் தமிழகத்துக்கு உண்டு. முந்தைய நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கைக்கு அனுமதிக்கும் முடிவை ஏற்றுக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் வாழ், பிறரை வாழ விடு என்கிற வாசகம் அமைந்துள்ளது. அந்த தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி பின்னும் ஆறு மாத காலமாக குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறவில்லை. தமிழ்நாடு என்று ஒரு மாநிலம் இருப்பதே தெரியாமல் மத்திய அரசு நடந்து கொள்வது என்ன நியாயம்? நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நீட்டுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு வாதிடுகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத்தான் ஜல்லிக்கட்டு விசயத்தில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவில்லை.

எனவே மத்திய அரசு தாமாக புரிந்து கொண்டு, நீட்டுக்கு விலக்கு அளிக்காமல் இருந்தது நியாயமா? இனி நீட் தேர்வு பொறியியல், எல்லா பட்டப்படிப்புகளுக்கும் பரிணமிக்க இருக்கிறது. அதைவிட ஆபத்து, வரும் டிசம்பர் 6 முதல் 11ஆம் தேதி முடிய பியூனஸ்அயர்ஸில் உலக வர்த்தக அமைப்பு மாநாடு நடைபெற இருக்கிறது. அம்மாநாட்டில் இந்தியாவின் கல்விச் சந்தையைத் திறந்துவிடும் ஆபத்து இருக்கிறது.

கல்வி, சுகாதாரத் துறை ஆகியவற்றை உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தையில் இருந்து நீக்க வேண்டும். நீட்டை எதிர்த்து மாணவர் போராட்டத்துக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆதரவளிக்க வேண்டும்.

நீட் சுதந்திரப் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்.

இந்த கருத்தரங்கில்   மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி மேலும்  பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள் பலர் கருத்தரங்கில் பங்கேறறனர்.