மும்பை

காராஷ்டிரா அரசு 4 மாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் அவசியம் ஆக்கி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் அகில இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது.   கடந்த சில நாட்களாக கொரோனா  பாதிப்பு இங்கு மேலும் அதிகரித்து வருகிறது.   மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை தொடங்க உள்ளதாக ஊகங்கள் தெரிவிக்கின்றன.   இங்கு மீண்டும் தீவிர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

தற்போது மகாராஷ்டிராவில் சுமார் 17.8 லட்சத்துக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  மொத்தம் 16.5 லட்சத்துக்கும் அதிகமானோர் மட்டுமே குணம் அடைந்துள்ளனர்.  நேற்றுவரை 81.5 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.   எனவே மகாராஷ்டிர அரசு பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

அவ்வகையில் மகாராஷ்டிராவுக்கு வர 4 மாநில மக்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்னும் சான்றிதழ் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது.  அவை டில்லி, ராஜஸ்தான் குஜராத் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் ஆகும்.   இந்த மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இவ்வாறு உத்தரவு இடப்பட்டுள்ளது.