உத்தரபிரதேசம்: கும்பமேளா அலங்கார பணியில் நேரு சிலை அகற்றம்…..காங்கிரஸ் கொதிப்பு

லக்னோ:

உத்தரபிரதேசத்தில் கும்பமேளாவுக்கு அழகுப் படுத்தும் பணியில் நேரு சிலை அகற்றப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் வரும் ஜனவரி மாதம் கும்பமேளா நடக்கிறது. இதற்காக அலகாபாத் நகரை அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியின் ஒரு கட்டமாக பால்சன் சவுரகா பகுதியில் இருந்த நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சிலை அகற்றப்பட்டுள்ளது. நகரை அழகுப்படுத்தும் விதமாக இது அகற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முன்னாள் பிரதமர் நேருவை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

இதை கண்டித்து சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்நோக்கத்துடன் சிலை அகற்றப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினர். சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் எந்திரத்தை முற்றுகையிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர்.

அழகுப் படுத்தும் பணிக்காக நேரு சிலை அகற்றப்பட்டதாக கூறும் அரசு, அதே சாலையில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபத்யாய் சிலையை ஏன் அகற்றவில்லை என்று கேள்வி எழுப்பினர். ஆனந்த் பவன் அருகில் இருந்து சிலையை அகற்றுவதன் மூலம் நேருவின் சித்தாந்தங்களை மறைக்க சதி செயல் நடக்கிறது. இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்று போராட்டாத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் விபரம் தெரிவிக்க முன்வரவில்லை. கும்பமேளா விழாவுக்காக சாலையை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. சாலை மையப் பகுதியில் இருந்ததால் நேரு சிலை அகற்றப்பட்டது. நேரு சிலை அங்குள்ள பூங்காவிற்கு அருகில் நிறுவப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Nehru statue removed in Allahabad for Kumbh beautification drive Congress furious, உத்தரபிரதேசம்: கும்பமேளா அலங்கார பணியில் நேரு சிலை அகற்றம்.....காங்கிரஸ் கொதிப்பு
-=-