பொலிட்டிக்கல் புதையல்: 4:
பிரதமர் நேரு ஆறு நாட்கள் டேராடூன் நகரில் ஓய்வு எடுத்த பின் 26/5/64 அன்று மாலை டில்லி திரும்பினார். இரவு 11 மணிக்கு உறங்கச் சென்றார். இரவு இரண்டு மணிக்கு அவருக்கு ரத்த வாந்தி ஏற்பட்டது.
அன்று விடிந்த வைகறைப் பொழுது (27/05/64) அவருக்கு இறுதி நாளாகி விட்டது. காலை 6 மணிக்கு மருத்துவர்கள், நேரு நினைவிழந்த நிலையில் உயிருடன் இறுதிப்போர் நிகழ்த்திக்கொண்டிருக்கும் விசயத்தை அறிவித்தனர்.

நேரு உடல்.. தீன் மூர்த்தி பவனில்..
நேரு உடல்.. தீன் மூர்த்தி பவனில்..

காலை 9 மணிக்குள் நந்தா, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, லால்பகதூர் ஆகியோர் கூடினர்.
அன்று பாராளுமன்ற கூட்டம் தொடங்க இருந்தது. பகல் 1.44 மணிக்கு நேருவின் உயிர் பிரிந்து விட்டது. சி.சுப்பிரமணியம் நேருவின் பிரிவை 2.19 மணிக்கு பாராளுமன்றத்தில் அறிவித்தார். பிறகு, இருக்கைகள் வெறிச்சோடின.
நேரு இறந்தபோது காமராஜர் தமிழகத்தில் இருந்தார். மைசூர் மாநிலத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்த நிஜலிங்கப்பாவும், அதுல்யாவும் இணைந்து சென்னையில் காமராஜரோடு சேர்ந்து, சென்னையில் இருந்து தனி விமானத்தில் டில்லி சென்றனர். ஆந்திர மாநிலத்தின் தூரக் கிராமம் ஒன்றில் மாட்டு வண்டி தவிர வேறு மார்க்கமறியாது தவித்தார் சஞ்சீவரெட்டி. அமெரிக்காவில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்த பாதுகாப்பு அமைச்சர் சவான் ஓடி வந்தார்.
செய்தி...
செய்தி…

நேரு இறந்தபோது முடிவெடுக்கும் திறமும், தகுதியும் படைத்தோர் அருகில் இல்லை. நந்தாவே இடைக்கால பிரதமராக இருக்கலாம் என்றாராம் லால்பகதூர். கிருஷ்ணமேனனோ, ‘இதை குடியரசு தலைவரோ, பாராளுமன்ற கட்சியோதான் முடிவு செய்ய வேண்டுமென்றாராம். ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நந்தாவையே அப்பொறுப்பில் நியமித்தார்.
இது நடந்து முடிந்த பிறகே காமராஜ் டில்லிக்கு வந்தார்.
மொரார்ஜி தேசாய் 2.30 மணிக்கே வந்துவிட்டார் தீன்மூர்த்தி பவனுக்கு! அங்கு நடைபெற வேண்டியவைகளை உத்தரவுகளாக மொழிந்து கொண்டிருந்தார். நந்தாவுக்கு யோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் நடவடிக்கை பலருக்கு பிடிக்கவில்லை. பிறர் பார்ப்பதற்கு வாய்ப்பாக நேருவின் உடலை ஒரு மர  மேடைமீது கிடத்த் வேண்டுமென்றாராம் தேசாய். அருகில் இருந்த சுகாதாரதுறை அமைச்சர் சுசீலா நய்யார், ‘அம்மாதிரி வைத்தால் பிறர் பார்க்க வாய்ப்பாக இருக்காது” என்றாராம். ‘இல்லை’ இது முன்பே முடிவெடுக்கப்பட்டது என்றாராம் தேசாய்.
மொரார்ஜி தேசாய்
மொரார்ஜி தேசாய்

சட்டென்று கோபப்பட்ட அம்மையார், ‘இந்த உத்தரவுகளை வழங்க நீங்கள் யார்’ என்று கேட்டாராம். ஒப்பற்ற தலைவரின் பிரிவு சோகத்தில் பிளவு சக்திகளின் பேயாட்டத்தின் முன்மாதிரி இது. வெள்ளைச்சேலை உடுத்தி சோகமே உருவாக தரையில் இந்திரா அமர்ந்திருந்தார்.
பிற்பகல் 3 மணிக்கு தீன்மூர்த்தி பவனில் பொதுமக்கள் கூட்டம் கூடத்தொடங்கிவிட்டது. துயரத்தில் வாய்விட்டு அழுதனர். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் முதலியோரின் கண்களில் கண்ணீர்த்துளிகளைக் காணோம். மாறாக, தீப்பொறிகளே பறந்து கொண்டிருந்தன. அடுத்த பிரதமராக தமது அணியைச் சேர்ந்தவரை ஆக்கி விட வேண்டும் என்ற ஆவேசப் பொறி!
தீன்மூர்த்தி பவனின் சுவர் மூலைகள், தூண்கள்ஆகியவற்றில் எல்லாம் இருவர், மூவராக நின்று தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். பொதுமக்கள் பார்வை தமது மறைந்த தலைவரின் முக தரிசனத்திலே ஒன்றியிருந்தது. அரசியல் கொள்ளிக்கண்களோ எதிர் கூடாரத்து முகங்களின் போக்கையும், செயல்களையும் உற்று நோக்கிக் கொண்டிருந்தன.
நந்தா
நந்தா

காமராஜர் டில்லியில் அடி வைத்ததுமே இவற்றைக் கேட்டார், கண்டார், அதுமுதல் அவர் வாயில் வெளிப்பட்ட சொற்கள், ஒற்றுமை, கண்ணியம் என்பவைதாம். பலதரப்பினரிடமும் பேசிய அவர், தேசாயிடம் மட்டும் பேசவில்லை. தேசாய் விரும்பிகள்தாம் துக்க வீட்டைத் தேர்தல் அலுவலகமாக ஆக்கியதில் முன்னணி வகித்தவர்கள்.
இதனால்தான் காமராஜர் பேசவில்லையோ? மற்றவர்களுடன் பேசினால் பொதுவாகவே இருந்தாலும், தேர்தல் பேச்சு என்ற  எண்ணம் ஏற்பட்டுவிடுமே என்பதாலோ?
நள்ளிரவில் காமராஜரை காணவந்த அதுல்யா, ‘எங்கு பார்த்தாலும் தேசாய் தீ பற்றி எரிகிறது. எல்லோரிடமும் ஆதரவு திரட்டப்படுகிறது. இதற்கு யார் உரிமை அளித்தது, இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என வற்புறுத்தினார்.
காமராஜர்
காமராஜர்

காமராஜர் எது நடந்தாலும் சமாளித்துக்கொள்ளும் வீர நெஞ்சுடனே காணப்பட்டார். “என்ன ஆனாலும் சரி,  இறுதிச் சடங்கு முடியும் முன்னே பிரதமர் பதவி பற்றி பேசுவதுகூட முறையில்லை” என்று கூறி அதுல்யாவை அனுப்பி விட்டார். தலைமைக்குரிய அஞ்சாமையின் இலக்கண காட்சி இதுதான்.
28-5-64 பிற்பகலில் நேருவின் சிதைக்கு தீ மூட்டினர். தீயின் நாவுகள் அடங்குவதற்குள் நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசித் திரும்பியபோது, “நான் உங்களை எதிர்த்து நிற்கவில்லை. என் ஆதரவு முழுதும் உங்களுக்குத்தான்” என்று நந்தா, சாஸ்திரியிடம் கூறினாராம். இவர்களும் அன்று முழுவதும் அடுத்த பிரதமர் தேர்தவைத்தான் எண்ணிக் கிடந்தார்கள் எண்ணும்போது, அரசியலின் அநாகரிகப் போக்கை வெறுக்காமல் இருக்கமுடியுமா?
(அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் சு.அறிவொளி எழுதிய ‘சிக்கல் தீர்த்த காமராஜர்’ நூலில்…)
கட்டுரையாசிரியர் ஆர்.சி. சம்பத் அவர்களின் தொடர்பு எண்:  9790752183