கோவா: பள்ளி பாடப் புத்தகத்தில் நேரு படத்துக்கு பதிலாக சவர்க்கர் படம் சேர்ப்பு….காங்கிரஸ் கண்டனம்

பனாஜி:

கோவா மாநிலம் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் மறைந்த பிரதமர் நேருவின் படம் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். இணை நிறுவனரும் சுதந்திர போராட்ட வீரருமான விநாயக சவர்க்கர் படம் சேர்க்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மாணவர் அமைப்பான தேசிய மாணவர் பேரவை இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மீண்டும் நேரு படம் இடம் பெற வலியுறுத்தியுள்ளது.

இந்த புத்தகத்தின் 68-வது பக்கத்தில் மகாராஷ்டிரா வார்தாவில் உள்ள சேவாகிரம் ஆசிரமத்தில் 1935-ம் ஆண்டு நேரு, காந்தி, மவுலானா ஆசாத் உள்ளிட்டோர் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் இருந்துள்ளது. மேலும், நேருவின் 2 புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது இந்த 2 படங்களும் நீக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் மாணவர் அணக தலைவர் அராஸ் முல்லா கூறுகையில், ‘‘பாடப்புத்தகத்தில் விநாயக் சவர்க்கர் ஒரு புரட்சியாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நேரு படத்தை நீக்கியுள்ளனர். அடுத்து மகாத்மா காந்தி படத்தையே நீக்குவார்கள். வரலாற்றை மாற்ற அவர்கள் முயற்சிக்க வேண்டாம்’’ என்றார்.

இது குறித்து கோவா கல்வித்துறை அமைச்சர் கஜானன் பட் கூறுகையில், ‘‘உயர் கல்வித்துறை தலைவரிடம் நேரு புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது’’ என்றார்.